Thursday, July 3, 2014

எங்களை கைவிட்டு காலம் ஒடிக்கொண்டிருக்கின்றது !

முள்ளிவாய்கால் பேரவலத்தின் முடிவில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் வேறு தளங்களுக்கு நகர்த்தப்பட வேண்டிய நிலை உருவானது. ஆயுதப் போராட்டங்களின் மூலமாக தனி நாடு உருவாக முடியும் என்ற சித்தாந்தம் மாற்றமடைந்திருக்கும் அல்லது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் உலக நடைமுறையினை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கடந்த மூன்று தசாப்தகால போராட்டத்தில் எமக்கான தேசம் என்ற ஒற்றை இலக்கிற்காய் மடிந்து போனவர்களின் கனவுகளை அப்படியே தூக்கி எறிந்து விட்டு நாம் சென்று விட முடியாது. 2009 ற்கு முன்னர் விடுதலைப் போரின் ஆதரவுத் தளமாக இருந்த புலம்பெயர் தமிழர்கள் 2009 ற்கு பின்னர் விடுதலைக்கான முனைப்புகளின் முன்னிலைப் படுத்தப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆதனால் தான் புலம் பெயர் தமிழர்களின் ஒற்றுமையை சிதைப்பதற்கும் அது சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை குலைப்பதற்கும் ஸ்ரீலங்கா அரசு கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. ஆயுதப் போராட்டம் ஏற்படுத்த முடியாத நீண்டகால பேரழிவுகளை புலம் பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா அரசு நம்புகின்றது அதனை எண்ணி அஞ்சுகின்றது. தயாகத்தில் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான தண்டனையை புலம்பெயர் தமிழர்கள் பெற்றுக் கொடுப்பார்கள் என்ற அச்சமே இன்னும் ராஜபக்சக்களையும்; பென்சேகாவையும், ரனிலையும், காவிகளையும் கவலை கொள்ள வைக்கின்றது. ஸ்ரீலங்கா அரசால் ஆக்கரிமிக்கப்பட்ட எமது மண்ணில் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தாயக மக்களும் அவர்களை அரசியல் ரீதியில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மிகக் கூடிய அழுத்தங்களை எதிர் கொண்டுள்ள நிலையில் புலம்யெர் தமிழர்களின் செயல்பாடுளே வீச்சம் பெற வேண்டிய நிலையை காலம் ஏற்படுத்தி விட்டுள்ளது. ஆனால் துரதிஸ்டவசமாக நாங்கள் எமக்குள்ளான போராட்டங்களை முனைப்பு படுத்தவதில் தீவிரம் காட்டி நிற்கின்றோம். தாயகத்தில் இன்னும் எங்கள் மக்களின் அவலங்களை, முள்ளிவாய்கால் பேரவலத்தின் வலிகளை, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான தேவைகளை சர்வதேச நாடுகளுக்கும் அமைப்புகளுக்கும் தொடர்ச்சியாக எடுத்துச் சொல்ல வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர் தமிழர்கள் முன்னால் விரிந்து கிடக்கின்றது. எமது போராட்டத்தை இதன் மூலமாகவே அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். நாடு கடந்த மக்களின் விடுதலை உணர்வு மங்கிப் போகமால் நிலைத்திருக்க வேண்டும். எனினும் இலங்கையில் இடம்பெறுவது இன அழிப்பா இல்லையா என்பதே இன்று விவாததத்திற்குரிய விடயமாக மாறிப் போயிருப்பது எவ்வளவு தூரம் வேதனைக்குரியது. இன அழிப்பு என்றால் என்ன என்று அகாராதி விளக்கங்கள் தேடி அது சரி இது பிழை என்று விவாதிப்பதிக்கும் எங்களை கைவிட்டு காலம் ஒடிக்கொண்டிருக்கின்றது. இன அழிப்பு ( Genocide) என்றால் அது யூதர்களுக்கு மட்டுமேயானது யூத இனம் மட்டுமே இன அழிப்பிற்குட்பட்டது எனவே அதனை பயன்படுத்துவது எமக்கு பயன்தராது என்பதே அதனை நிராகரிப்பவர்கள் சொல்லும் காரணம். இன அழிப்பு என்பது மிகப் பெரிய விடயம் அதை நோக்கி நகர்வதும் அதனை நிரூபிக்க முயல்வதும் வெற்றியை தேடித்தராது அது வீணான முயற்சி என்று ஆதாரங்களை அடுக்குகின்றார்கள். இன அழிப்பு என்றால் ஒரு இனத்தை முழுமையாகவோ பகுதியாகவோ இல்லாமல் செய்வதற்கு மற்றுமொரு இனம் மேற்கொள்ளும் தாக்குதல். இது பகுதி பகுதியாக ஒரு இனத்தை அழிக்கும் சங்கிலித் தொடர் நிகழ்வுகளை கொண்டதாக இருக்கும் என்று சொல்கின்றார்கள். முள்ளிவாய்காலில் ஆயிரக்கணக்கில் அப்பாவி தமிழர்களை கொன்றது மட்டுமல்ல அதன் பின்னர் வடக்கு கிழக்கில் நடைபெறும் திட்டமிட்ட பல நடவடிக்கைகளும் தமிழர்கள் மீது இன அழிப்பு நடைபெறுகின்றது என்பதற்கு ஆதாரங்களாக இருக்கின்றன.குறிப்பாக ஒரு இனத்தின் இனவிருத்தியினை தடை செய்யும் முனைப்புகள் கூட இன அழிப்பின் ஒரு வடிவம் தான் என்று சொல்லப்படுகின்றது. கோட்பாடுகளும் வரைவிலக்கணங்களும் மனிதர்களால் மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டவை அவை காலப் போக்கில் மாற்றமடைந்தே வருகின்றன. அது போல தமிழர்கள் மீதான ஸ்ரீலங்கா அரசின் செயல்பாடுகளும் இன அழிப்பாக ஒரு காலத்தில் பதிவு செய்யப்படலாம், அப்படி ஒரு போதும் நடக்காத என்று அடித்துக் கூறும் அதீத சக்தி பெற்றவர்கள் யாரும் இங்கில்லை என்றே கூறலாம். காலம் தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றது. நாம் எமக்குள் மோதி என்ன பலன்; கிடைத்துவிடப் போகின்றது. ஆனால் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இன அழிப்பா ? போர்குற்றமா ? என்ற ஒரு பதத்திற்கான மோதலில் நாம் ஈடுபடுவதையும் இதனை முன்வைத்து தமிழர் சமூகம் பிளவு பட்டு நிற்பதை தம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் விடுதலை தீயில் ஆகுதியாக்கிய அந்த ஜீவ ஆத்மாக்கள் மன்னிக்குமா ? எமக்குள் எழுந்துள்ள இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குள் இனப் படுகொலை புரிந்தவர்கள் அல்லது போர் குற்றம் புரிந்தவர்கள் தப்பி விடுவார்களே ? நாம் எமது பிரச்சினைக்கு ஒரு முடிவிற்கு வரும் போது அங்கே “எல்லாம்” முடிந்து போய்விடுமே ? அப்போது நாம் என்ன செய்வோம் எங்கள் முன் உள்ள மிக முக்கிய பிரச்சினை எமது இனத்தின் விடுதலையா அல்லது எம்மீது மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலையா போர் குற்றமா என்ற விவாத்திற்கான தீர்ப்பா ? எது முக்கியம் என்பதை சம்பந்தப்பட்டவர்களே தீர்மானிக்க வேண்டும் மக்கள் மத்தியில் வெளிப்படையான உரையாடல்கள் இன்றி தெளிவு படுத்தும் வேலைத் திட்டங்கள் இன்றி புலம் பெயர் தமிழர் அமைப்புகள் தமது வேலைத் திட்டங்களை மூடி வைப்பது ஆரோக்கியமாகாது. 2009 ற்கு முன்னர் ஒரணியாக இருந்தவர்கள் இப்போது எதிரிகள் போல் முறைத்துக் கொண்டு திரிவது ஏன் ? எல்லா அமைப்பிலும் எல்லா இடத்திலும் தவறுகள் இருக்கும் அது தவிர்க்க முடியாதது தான்.உலகின் மிக உறுதியான கட்டுக் கோப்பான விடுதலைப் போராட்ட அமைப்பில் தான் மாத்தையாவும் கருணாவும் இருந்தார்கள் அதற்காக விடுதலைப் புலிகளே தவறான அமைப்பு என்று யாராவது சொல்லி விட முடியுமா ? முள்ளிவாய்கால் நினைவு நிகழ்வை நடத்துவதில் தொடங்கி இன்று கனேடிய பாராளுமன்றத்திற்கு செல்லும் பிரதிநிதி யாரின் “செல்லம்”; என்பது வரை எங்கள் முரண்பாடுகள் முட்டி மோதுகின்றன. இதற்கிடையில் தாளத்திற்கு போட்டியாக ஆட்டம் ஆடும் நிகழ்வுகளும் இதன் நீட்சியாக அரங்கேறுகின்றன. இது கால ஓட்டத்தில் இன்னும் பல பிளவுகளை எங்களுக்குள் தோற்றுவிக்கும். இன்னும் இன்னும் பலவாய் நாம் பிரிந்து போகின்ற நிலை எம்மை மேலும் பலவீனப்படுத்தும், எங்கள் இலட்சியங்கள் தூரமாகும். புலம் பெயர் அமைப்புகளுக்கு இருக்கின்ற மக்களின் ஆதரவு தளம் இதனால் சிதைக்கப்படுகின்றது என்பதை நாம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். எம்மவர்களை வெற்றி கொள்வதற்கு அல்லது அவர்களை வீழ்த்துவதற்கே வியூகம் அமைப்பதற்காய் எம் நேரத்தை தொலைப்போம். தமிழ் மக்களை தலைமை தாங்குவது கனேடிய தமிழர் தேசிய அவையா, கனேடிய தமிழ் காங்கிரசா, நாடு கடந்த அரசாங்கமா… இல்லை இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கும் ஒரு அமைப்பா என்பது தன் நிலம் பறிக்கப்பட்ட எனது சகோதரனின் கவலை அல்ல ? அடுத்த வேளை உணவிற்கு யாரிடம் கையேந்தலாம் என்று அந்தரித்து அலையும் அப்பாவித் தமிழனிற்கு கனேடிய பாராளுமன்றத்திற்கு யார் தெரிவாகின்றார் என்பதும் முக்கிய பிரச்சினையாக இருக்காது. ஊடக பரப்புரைகளினால் ,பொருளாதார பலத்தினால்;, மாறி மாறி முன்வைக்கப்படும் அவதூறுகள் எம்மினம் குறித்த தவாறன புரிதல்களை அரசியல் கட்சிகளிடமும் அதன் ஆதரவாளர்களிடமும் ஏற்படுத்துவது எத்தனை ஆபத்தானது என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். பொருளாதார பலத்தினால் எதனையும் செய்து விடலாம் என்றும் காசு கொடுத்தால் தமிழ் ஊடகங்கள் எதனை வேண்டுமானாலும் ஒலி ஒளி பரப்பும் என்ற தவாறன தோற்றப்பாடுகள் ஆராக்கியமான சமூகத்தின் அறிகுறியாக அமையுமா ? புலம் பெயர் தமிழர்களின் பலத்தினால் மீண்டும் வாழும் கனவோடு காத்திருக்கும் தாயக மக்களுக்கு நாம் எதனை வழங்கப் போகின்றோம் ? தாயக விடுதலைப் போரில் தம் உறவுகளை இழந்து நிர்கதியாகி நிற்கும் மக்களுக்கு நாம் வழங்கும் நம்பிக்கை என்ன ? இங்கிருந்து எங்கள் முரண்பாடுகளை மூட்டை கட்டி கப்பல் ஏற்றி அனுப்பி வைப்போமா ? கனேடிய காங்கிரஸ் மீதான விமர்சனம் ஒரு பெட்டி, கனேடிய தமிழ் தேசிய அவை மீதான குற்றச்சாட்டுகள் ஒரு பெட்டி, நாடு கடந்த அரசாங்கத்தினர் மீதான விமர்சனங்கள் ஒரு பெட்டி என்று எங்கள் தேசத்தில் பரிதவித்து நிற்கும் உறவுகளுக்கு பரிசளிப்போம். ஆம் நாம் எல்லோரும் தாயகத்தில் வாழும் உறவுகளின் நலனுக்காகத் தானே இங்கே செயல்படுகின்றோம். மூன்று இலட்சம் தமிழர்கள் வாழும் கனடாவில் ஒற்றுமையாக செயல்பட முடியாத ஒரு இனத்திற்கு தனி நாடு தேவயா என்று இந்த நாட்டு அரசாங்கமும் ஏனைய இனத்தவரும் கேள்வி எழுப்புதை தவிர்க்க முடிhயமல் செய்கின்றன எங்கள் நகர்வுகள். இதனை மாற்றியமைப்பதற்கு திறந்த உரையாடல் ஒன்றை மேற்கொள்ள தமிழ் பிரதிநிதிகள் முன்வர வேண்டும், அது தான் இன்றைய காலத்தின் தேவையாகவும் உள்ளது. இனியும் காலம் கடத்தாமல் பேசுங்கள்.. நம்பிக்கை என்பது மட்டும் தான் நல்லது ஏனென்றால்; எறும்புக்கும் கூட வாழ்கையிருக்கின்றது ஆம் அது அதன் ஒற்றுமையால் உருவான வாழ்கை ! எங்களை கைவிட்டு காலம் ஒடிக்கொண்டிருக்கின்றது அதனை பிடித்து இழுத்து நிறுத்த வேண்டியது யார் ? .

Thursday, February 6, 2014

பனியில் தமிழ் எழுதி வெயிலில் வேகவிடும் ஒரு குரல்... !

ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கிருக்கும் ஆனந்தம் அல்லது ஆணவம் என்பது நான் பேசும் நான் கேட்கும் நான் வாசிக்கும் மொழி சார்ந்தே தான் இருக்கின்றது.

தமிழனின் அடையளம் "தமிழ்” என்பதாக மட்டுமே நான் பார்க்கின்றேன்.
எமக்கான பண்பாடு எமக்கான விழுமியங்கள் என பல கூறுகள் தமிழ் அடையாளம் கொண்டிருந்தாலும் மொழி தவிர்த்து அவற்றை சுமந்து செல்ல முடியாது என்பது தான் உண்மை.தமிழில் பேச முடியாத தமிழில் புரிதல் இல்லாத ஒரு  தலைமுறையோடு வாழும் வாழ்வு தான் புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு வாய்திருக்கின்றது.
இதனை மாற்றியமைப்பதற்கான முயற்சிகளை எங்கிருந்து எப்படி யார் தொடங்குவது என்பது எங்கள் எல்லோர் முன்னாலும் இருக்கின்ற கேள்வி.
எங்கிருந்தாலும் என்ன செய்தாலும் தமிழர்கள் தாம் பேசும் மொழியால் மட்டுமே தங்களுக்குள்ளான பிணைப்புகளை கொண்டிருக்க முடியும் என்று உறுதியாக நம்புகின்றேன்.

தமிழ் மொழியை பேசாத தமிழ் மொழி பற்றிய புரிதலும் அறிதலும் இல்லாவர்களை தமிழர்களாக கொள்வதில் அவர்களோடு தமிழினின் எதிர்காலம் குறித்து உரையாடுவதிலும் என்மனம் தடை கொள்கின்றது.
தமிழைப் பேசத் தெரியாதவர்கள் தமிழில் வாசிக்க முடியாதர்கள் தமிழ் குறித்து அக்கறை கொள்வதும் அதற்கான பக்கம் பக்கமாய் ஆங்கிலத்தில் பத்திகள் எழுதுவதும் அர்தமற்றதாகவே படுகின்றது.

தமிழ் குறித்து பேச முனைபவர்கள் முதலில் தமிழில் பேசவும் எழுதவும் முன்வர வேண்டும். அதற்கு பின்னர் அடுத்த தெரிவுகள் குறித்து நாங்கள் ஆராயலாம்.

குறைந்த பட்சம் எமது அடையாளத்திற்குரியதான மொழியை பேசுவதற்கே முடியாதவர்களின் பங்குபற்றுதல்களோடு முன்னெடுக்கப்படும் தமிழ் விழாக்களால் எங்களுக்கு என்ன செய்தியை சொல்ல முடியும்.

வேட்டி சட்டை போட்டு சேலை உடுத்து புலத்திலும் நாங்கள் தமிழர்களாக வாழ முற்படுகின்றோம் என்று படம் எடுத்து காட்டுவதை தவிர வேறு நன்மைகள் எவையும் இவற்றால் விளைந்து விடாது என்றே நம்புகின்றேன்.
எங்கள் மொழியை தவிர்த்து விட்டு தமிழர்கள் என்ற அடையாளம் சுமப்பதில் பயன் எதுவும் இல்லை என்பதே என் நிலை வாதம்.

புலம்பெயர் தேசங்களில் தமிழை அழியாமால் காப்பதற்கான "முயற்சிகள்" பெயரளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் அதன் போக்குகளும் அது ஏற்படுத்தும் தாக்கங்களும் ஆரோக்கியமானவையா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுகின்றது.

எங்கள் மொழியின் தொன்மை குறித்தும் அதன் மாண்புகள் குறித்தும் மாற்றின சமூகத்திற்கு தெரிவிப்பதற்கும் தெளிவு படுத்துவதற்கும் முதலில் எங்கள் அடுத்த சந்ததிக்கு அதனை தெளிவுபடுத்துதல் வேண்டாமா ?

கம்பனையும், வள்ளுவனையும் படமாக வரைந்து ஐம்பெருங்காப்பியங்களையும் தமிழ் எழுத்துருக்களையும் விழா மேடைகளில் காட்சிப்படுத்துவது ஒருபோதும் தமிழை வளர்ப்பதற்கு உதவாது. இங்கே பல மேடைகளில் தமிழில் பேசும் தமிழில் பாடும் பலரும் ஆங்கிலத்தில் எழுதிய தமிழையே பயன்படுத்துகின்றார்கள் என்ற கசப்பான உண்மையை நாங்கள் மறைத்துவிட முடியாது.

இது சமூகம் சார்ந்த ஒரு பிரச்சினை தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் குரல் கொடுக்கும் ஒரு தலைமுறையின் குழந்தைகள் தமிழில் இருந்து அந்நியப்பட்டு நிற்கின்ற வேதனையை நாம் அனைவரும் ஏற்றுக் கொண்டே தான் ஆக வேண்டும். இதற்கான முழுப்பொறுப்பையும் மற்றவர்கள் மீது சுமத்தி விட்டு தப்பிக்கும் தந்திரோபாயங்களை இனியாவது நாம் அனைவரும் கைவிட வேண்டும்.

தமிழ் குறிந்த அக்கறையுடன் இயங்குவதாக கூறிக் கொள்ளும் பலரின் வீடுகளில் மருந்துக்கும் தமிழ் இல்லை என்பதை மனம் திறந்து அவர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இதை மாற்றுவதற்கு புலத்தில் தமிழின் வாழ்விற்கு தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் பல்வேறு தளங்களில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

வீட்டில் தமிழ் உரையாடல்களையும் தமிழ் வாசிப்பினையும் ஊக்கப்படுத்த ஒவ்வொரு பெற்றோரும் முன் வருதலே மாற்றத்திற்கான முதல் படியாகும்.

அதனை விடுத்து ஊடகங்கள் மீதும் ஊடகர்கள் மீதும் காச்சலையும் பாச்சலையும் காட்டுவது மாற்றத்தை தந்து விடாது.

மறுபுறம் தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசும் கலப்படத்திற்கு தமிங்கிலிஸ் என்று பெயரிட்டு புதுமொழி உருவாக்கும் முயற்சிகளை சரியான முறையில் எதிர் கொள்ள முயல வேண்டும்.

இந்த நிலை உருவாவாதற்கு ஒரு சிலரோ அல்லது ஒர சில ஊடகங்களோ மட்டுமே காரணம் என்று கைகாட்டி விட்டு கைத்தட்டல் பெற நினைப்பது வெறுக்கத்தக்க அரிசயலன்றி வேறில்லை.

இந்த நிலைக்கு இங்கு வாழும் நாம் அனைவருமே பொறுப்புக் கூற வேண்டும்.
தமிழுக்கு எடுக்கப்படும் விழாவில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழில் உச்சரிக்கப்படும் வார்தைகளுக்கு அனுமதியளிக்கும் ஏற்பாட்டாளர்களும் கூட கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.

மூன்று மணி நேரம் நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் காண்பிக்கும் அக்கறையில் ஒரு சிறு வீதமாவது அது சரியான முறையில் சரியான தமிழில் இடம்பெறுகின்றதா என்பதிலும்; இருக்க வேண்டும் அல்லவா ?
மறு புறம் புலத்தில் தமிழ் நிலை பெறுவதற்கு ஊடகங்களின் பங்கு மிகப் பெரியதும் கனதியானதும் என்பது உண்மை தான்.

தமிழ் ஊடகங்கள் தமிழை சரியாக கையாள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு சேர்பதில் ஊடகங்கள் கனதியான பங்கினை ஆற்ற வேண்டும்.

ஆனாலும்; ஊடகங்கள் மற்றும் ஊடகர்களால் மட்டுமே இந்த பெரிய பணியை செய்து விட முடியும் என்று எவரும் கருதிவிட முடியாது.

பெருவணிகமாக மாறி நிற்கும் ஊடகத்துறை தன்னை நிலை நிறுத்துவதற்கு மரக்கறி மீன் இறைச்சி விலைகளை கூவி விற்கும் வியாபாரிகளாக மாற்றி விட்டுள்ள ஊடகர்கள் தமிழை வளர்க்க வேண்டும் என்று அதே சமூகம் வேண்டுவது காலக் கொடுமை என்பது தவிர வேறென்ன நான் சொல்ல.

ஊடகங்களை ஊடகங்களாகவும் ஊடகர்களை ஊடகர்களாகவும் இயங்க முடியாத அளவிற்கு பொருளாதார வலைப் பின்னலை வீசி எறிந்து விட்டுள்ள சமூகம் அதற்குள் இருந்து கொண்டு அவர்களை தமிழ் படிப்பிக்க கேட்பது என்பது கூட ஒருவித நகை முரண்தான்.

ஊடகங்களின் இருப்பு என்பது அதன் விளம்பரதாரர்களின் ஆதரவில் மட்டுமெ தான் தங்கியிருக்கின்றது.

அதிகளவு மக்களால் கேட்கப்படும் பார்க்கப்படும் வாசிக்கப்படும் ஊடகங்களே விளம்பரதாரர்களின் தெரிவாக இருக்கின்றது.

தமது இயலுமைகளை வெளிப்படுத்த தம்பக்கம் அதிக மக்களை கவர்ந்திழுக்க ஊடகங்கள் எத்தனை பிரயத்தனங்களை எல்லாம் மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது என்பதே தனியான ஆய்விற்குட்படுத்த வேண்டிய விடயமாகி இருக்கின்றது.

ஊடகத்தார் எல்லாம் சொர்க்கத்தில் வாழும் வாழ்வு வாய்க்கப் பெற்றவர்கள் அல்ல என்பதை முதலில் அனைவரும் உணர வேண்டும்.

எனக்கு தெரிந்த வரை இங்கே பெரும்பாலான ஊடகர்களுக்கும் அவர்களுக்கு படியளக்கும் நிர்வாகத்தினரும் மிகப் பெரும் பொருளாதார நெருக்குவாரங்களுக்குள்ளும் மன உழைச்சலுக்குள்ளும் தான் ஊடகங்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்படியானால் ஏன் நீங்கள் நடத்த வேண்டும் என்ற கேள்விக்கு சத்தியமாக என்னிடமும்; பதில் இல்லை.

ஆனால் ஒலிவாங்கியின் முன்னில்லாத நாட்களில் சூனியமான பொழுதுகளை நான் உணர்ந்திருக்கின்றேன். ஏதோ ஒரு வெறுமையில் உளன்றிருக்கின்றேன். இதே நிலை தான் என்னைப் போன்ற எல்லோருக்கும் இருக்கும் என்றும் நம்புகின்றேன். 

ஊடகர்கள் மீது படரும் நல்லதும் தீயதுமான விமர்சனக் கொடிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் அவர்களை சித்திரவதை செய்து கொண்டே தான் இருக்கின்றன.

இப்போதும் இணைய வலைகளில் முகம் மறைத்து அநாமதேய முகவரி சூடியபடி இணையத்தில் புரட்சிகள் புரியும் எத்தனை புனிதர்களின் வசைகளை நாங்களும் தாங்க வேண்டியிருக்கின்றது.

நாளை வரும் காசோலைக்கான பணத்தை யாரிடம் என்ன பொய் சொல்லி புரட்டடி வங்கியில் செலுத்தலாம் என்ற யோசனைக்குள் தொலைந்து போகும் நல்ல சிந்தனைகளை எப்போது நாம் மீளப் பெறப் போகின்றோம்.

இத்தனையும் தாண்டித் தான் நாங்கள் சிரித்து பேசி பாடல்களையும் ஒலிக்க விட வேண்டியும் செய்திகளையும் தகவல்களையும் தவறுகளின்றி ஒப்புவிக்க வேண்டியிருக்கின்றது.

உங்களைப் போலவே நாங்களும் மனிதர்கள் எங்களுக்கானதுமான உலகம் ஒன்று உண்டு என்பதை விமர்சகப் பெருந்தகைகள் மனதில் கொள்ள வேண்டும் என காலில் விழுந்து கேட்பதை தவிர வேறென்ன சொல்லிவிட முடியும்.

எங்களால் முடிந்த அளவிற்கு எங்கள் எல்லைகளை மீறாமல் எங்கள் பணியினை நாங்கள் செய்ய எங்களை அனுமதியுங்கள் என்று மன்றாடிக் கேட்கின்றேன்.

மீண்டும் மீண்டும் நீங்கள் காணும் கனவுகளை எங்கள் கண்களின் ஊடாக காட்சிப்படுத்த முனையாதீர்கள்.

எங்கள் தொழில் இது எங்கள் வாழ்வு இது நாங்கள் விரும்பி தெரிந்த துறையில் எங்களை சுதந்திரமாய் இயங்க அனுமதியுங்கள்.

எந்தத் தேர்தலில் நின்றாவது ஆசனத்தை கைப்பற்றிவிடும் ஆசையில் நடைபெறும் தேர்தல்களில் எல்லாம் போட்டியிடும் அரசியில் வாதியின் மன நிலையில் எங்களால் இயங்க முடியாது.

யாருடைய உழைப்பையேனும் அடைவு வைத்து எமது வீட்டு கடனை அடைத்துவிடும் சாமர்த்தியம் எங்களுக்கு கைவரவில்லை என்பதற்காய் எங்களை ஏறி மிதித்து நீங்கள் நல்லவர்களாக மாறிவிடலாம் என்று எண்ணி விடாதீர்கள்.

இது எல்லோருக்கும் பொருத்தமான பதிவு அல்ல ஆனால் பொருந்திக் போகின்றவர்களுக்கானது. இது எமது ஆற்றாமையின் வெளிப்பாடு அல்ல இது எங்களின் கோபம்.

இறுதியாக நாங்கள் மட்டுமே தமிழ் வளர்ப்பதற்காய் பிரசவிக்கப்பட்டவர்கள் என்றோ அல்லது சாபமிடப்பட்டவர்கள் என்றோ எண்ணியபடி உங்கள் வாசல்களுக்கு அப்பால் தமிழை அண்டவிடாமல் அடித்துச் சாத்திவிட்டு எங்களை சபித்துக் கொட்டாமலிருங்கள் அது போதும்.

எல்லோருக்கும் வாழ்வு என்பது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றாற் போல் அமைந்து விடுவதில்லை அமையும் வாழ்விற்கு முன்பாக எதிர்பார்ப்புகள் என்பவை  எப்போதும் பயணித்துக் கொண்டே தான் இருக்கின்றன.

அது போலவே எங்களுக்கும் நல்லதொரு நாள் விடியும் என்ற நம்பிக்கைகளோடு நாங்கள் ஒவ்வொரு விடியலையும் எதிர் கொள்கின்றோம்.
எங்களுக்கு தெரிந்ததையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்று நம்புவதையும் உங்களோடு பகிர்வதற்கு முயல்கின்றோம்.அதில் தவறுகள் இருந்தால் தாராளாமா தெரியப்படுத்துங்கள் திருத்திக் கொள்கின்றோம்.

அதைவிடுத்து சமூக அவலங்களுக்கும் அநீதிகளுக்கும் ஊடகங்களும் ஊடகர்களும் மட்டுமே காரணம் என புனிதராகி புளகாங்கிதம் அடையாதீர்கள்.


நீங்களும் நாங்களும் சேர்ந்தது தான் இந்த சமூகம் இதனை மாற்றுவதற்கு எல்லோரும் கூடினால் மட்டுமே முடியம் நீ பிழை நான் சரி என்று மாறி மாறி குற்றம் சாட்டினால் தமிழை தலை முழுகுவதை தவிர வேறு தெரிவுகள் எவையும் இருப்பதாக தெரியவில்லை எனக்கு.

இது வலியால் எழுதப்பட்ட பதிவு ஆனால் தமிழுக்கு வலிமை சேர்ப்பதற்கான பதிவு என்பதை மட்டுமாவது மனதில் கொண்டால் போதும்.

வெளியே கொட்டும் பனியில் இந்த நகரம் நிறைந்து கிடக்கையில் ”பனியில் தமிழ் எழுதி வெயிலில் வேக விடும் ஒரு முயற்சித்தானோ என்று எண்ணம் தோன்றுவதையும் தடுக்க முடியவில்லை என்னால்

Monday, September 30, 2013

ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் - A Gun and a Ring


ஒரு துவக்கும் ஒரு மோதிரமும் என்று பெயர் வைப்பதற்கு தான் அவர்கள் முதலில் யோசித்தார்கள் பின்னர் அது ஆங்கில வடிவம் பெற்று இன்று  A Gun and a Ring   ஆக எங்கள் முன் காட்சிப்படுத்தபபட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இரவு இந்த திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சியினை காணும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது.
சீனாவில் நடைபெற்ற திரைப்பட விழாவிலும் மொன்ரியல் திரைப்பட விழாவிலும் சிறந்த திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றிருக்கும் இந்த திரைப்படம் பெருமளவான எதிர்பார்பை ஏற்படுத்தி விட்டுள்ளதை அரங்கில் திரண்டிருந்த இரசிகர்களின் எண்ணிக்கை புலப்படுத்தியது.

நம்வர்கள் படைப்புகள் என்றாலே தூர விலகி ஓடும் நம்மவர்களே நான்கு அரங்குகளிலும் இதன் முதல் காட்சியை பார்க்கும் ஆவலோடு காத்திருந்தமை ஆரோக்கியமான மாற்றத்தின் அறிகுறி.

அந்த ஆவலை எந்த வகையிலும் பாதிக்காத படைப்பாக அது அமைந்திருந்தது மகிழ்ச்சிக்குரியது.

80 களில் ஆரம்பித்த தமிழ் மக்களின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் 2009 ல் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனை ஒரு தகவலாக அல்லது செய்தியாக மாற்றினங்கள் கடந்து போகக் கூடும் ஆனால் இந்த மூன்று தசாப்பதங்களையும் யுத்த முனைகளிலும் அதற்கு வெளியிலும் அனுபவித்து எமக்கு அது செய்தி அல்ல அது எமது வாழ்கை.

ஆதனால் தான் போரின் வலிகளை நேரில் அனுபவித்த எம்மைவிட சிறப்பான முறையில் எவராலும் சொல்விட முடியாது என்று நான் முழுமையாக நம்புகின்றேன்.யுத்தம் முடிந்த பின்னரும் அதற்கு முன்னரும் எமக்கு இழைக்கப்பட கொடூரங்கள் அதன் வீச்சம் குறையாமல் எங்கள் மனங்களில் நினைவுகளாய் வாழ்கின்றன என்பதற்கான மற்றுமொரு சாட்சி இந்த திரைப்படம்.

நடந்து முடிந்த யுத்தம் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈழத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் பாதித்துக் கொண்டே தான் இருக்கின்றது. அது இனியும் எங்களை பாதிக்கத்தான் போகின்றது என்பதை பதிவு செய்கின்ற ஒரு முயற்ச்சியாகவே இந்த திரைப்படத்தை பார்க்கலாம்.

யுத்த பூமியில் இருந்து தப்பி வந்தாலும் அது எம்மை விட்டு விடாமல் தொட்டு தொடர்கின்றது என்பதற்கான சாட்சியங்களை நாங்கள் எமது அன்றாட வாழ்வின் ஊடாகவே தரிசிக்கின்றோம்.

83 கலவரத்தில் தாக்கப்பட்ட ஒருவர் இரத்தம் தோய்ந்த தனது உடைகளை இன்றும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றார் என்றால் அவர் இன்னும் அந்த வலிகளை மறந்து விடத்தயாரில்லை என்பதையே நாம் புரிந்து கொள்ளக் கூடிய செய்தியாக அவர் எங்களுக்கும் இந்த உலகத்திற்கும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்.

வெள்ளைவானில் கடத்தப்பட்ட தனது மகன் எங்கோ உயிரோடு இருக்கின்றான் என்ற நம்பிக்கையில் கோவில்களில் அவன் பெயருக்கு அர்சனை செய்யும் தாய்மாரை நாங்கள் எல்லாக் கோவில்களிலும் காண முடிகின்றது. ஆந்த தாயிடம் இருப்பது நம்பிக்கையை தாண்டி நிற்கும் ஆற்றாமை.

ஒன்றுமே அறியாத எனது குழந்தையை உன்னால் கூட காப்பாற்ற முடியவில்லையே என்று கடவுள் மீது வீசப்படும் விமர்சனமாகவோ வசையாகவோ தான் அந்த அரச்சனைப் பூக்களை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது.

ஆம் யுத்தம் முடிந்து விட்டதாக உலகம் எங்கள் மீது எத்தனை முறை வேண்டுமானலும் அடித்துச் சத்தியம் செய்தாலும் எங்கள் மனங்களில் எல்லாம் யுத்தம் மரணம் வரை உயிர் வாழ்ந்து கொண்டே தான் இருக்கும்.
புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளரும் அடுத்த தலைமுறை  மீது நாம் செலுத்தும் அதிகாரத்துடன் கூடிய வன்முறைகள் மூலம் எங்கள் வலிகளை கடத்திக் கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் நம்பிய எல்லாம் தோற்றுக் கொண்டே இருப்பதால் ....
எங்கள் நம்பிக்கைகள் எல்லாம் பொய்யாகிக் கொண்டே இருப்பதால்… எங்களிடம் இழப்பதற்கு இனி எதுவுமே இல்லை என்றானதால்…
எங்கள் வாழ்கையில் எதோ ஒரு புள்ளியில் துப்பாக்கிச் சன்னங்களால் நாம் காயப்படுத்தப்பட்டுள்ளதால் .....இது எமது கதைகளை பேசும் ஒரு திரைப்படம் என்பதை பார்வையாளனால் உள்வாங்கிக் கொள்ள முடிகின்றது. அது தான் இந்த படைப்பின் வெற்றியாகவும் கருதப்படுகின்றது.

யுத்தத்தையும் அதன் வலிகளையும் தவிரத்து விட்டு எங்கள் வாழ்கையை ஒருபோதும் பதிவு செய்து விட முடியாது என்ற யதாரத்தைப் பேசும் ஒரு படமாக யு புரn யனெ ய சுiபெ  அமைகின்றது.

ஓன்றோடொன்று தொடர்பு பட்டு நிற்கும் 6 கதைக் களங்கள் மூலமாக இந்த திரைப்படத்தின் கதை சொல்லப்படுகின்றது.


கனடாவில் உணவகத்தில் பணிபுரியும் ஒருவரின் மகனின் தற்கொலை. தனது ஒரே மகன் ஏன் தற்கொலை செய்து கொண்டான் என்பதை அறிந்து கொள்ள முனையும் மகனை இழந்த தாயின் தவிப்பு.


தனது மனைவி தன்னை விட்டு பிரிந்து வேறொருவனுடன் வாழ்வதை இயலாமையும் ஆற்றாமையுடனும் எதிர் கொள்ளும் ஒருவன்.தனக்கு துரோகம் செய்த மனைவியை கொன்று பழிதீர்க்க அலைகின்றவனின் கோபம்.

போரில் தனது குடும்பத்தையே இழந்த நிலையில் கனடாவிற்கு திருமணத்திற்காக வந்து சேரும் பெண். அவளை அழைத்தவனால் கைவிடப்படுகின்றாள். தனது எதிர்காலம் குறித்த கேள்விக்கான பதிலை கடவுளிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றாள்.

தனது தவறொன்றிற்காக வருந்தி தற்கொலைக்கு முனைந்து தோற்றுப் போகும்  ஒருவன்.

இவர்களை சுற்றி பின்னப்பட்ட கதைகளில் இவர்களுடன் தொடர்பு பட்டு நிற்கும் கிளைக் கதைகளுமாக இந்த திரைப்படம் பல தளங்களில் பயணிக்கின்றது.

இந்த கதைகளை ஒரு துப்பாக்கியும் மோதிரமும் இணைக்கும் உத்தி முற்றிலும் மாறுபட்ட திரை அனுபவம் ஒன்றை தந்து நிற்கின்றது.

உன்னோடு எனக்கு இனி எதுவுமில்லை என்று கூறி காதலானால் அடித்து வீழ்த்தப்பட்டு கிடக்கும் முன்னாள் கணவனின் முகத்ததில் அவனின் மனைவி வீசி எறியும் மோதிரம் முடிவில் வாழ்வை தொலைத்து விட்ட இருவரின் புதிய வாழ்வை ஆரம்பிப்பதற்கான குறியீடாக மாற்றப்பட்டுள்ளது.

ஒருபுறம் இழப்புகள் வலிகள் குறித்தும் ஏமாற்றகள் துரோகங்கள் குறித்தும் வாழ்வின் கறுப்பு நினைவுகளை பதிவு செய்யும் இந்த திரைப்படம், இழப்புகளை தாண்டியும் வாழ்கை இருக்கின்றது புதிய பயணங்களுக்கான பாதைகளை நாங்களே தெரிவு செய்ய வேண்டும் என்ற தெளிவானதும் அவசியமானதுமான செய்தி ஒன்றை எங்கள் எல்லோருக்காகவும் சொல்லி நிற்கின்றது.

யுத்தம் ஏற்படுத்தி நிற்கும் வலிகளை கதை மாந்தர்களின் உரையாடல்கள் மூலமாகவே இயக்குனர் லெனின் சொல்லியிருக்கின்றார்.

அவை காட்சிகளாக விரிந்திருந்தால் இன்னும் காத்திரமாக அமைந்திருக்கும் என்று சிலர் முன்வைத்த விமர்சனங்களோடு என்னால் உடன்பட முடியவில்லை.

யுத்தம் என்பது என்ன ? அது ஏற்படுத்தி சென்ற இழப்புகள் எவை ? அவை சார்;ந்த வலிகள் எவ்வாறனவை என்பதை காட்சிப் படிமங்களாகவே அறிமுகம் செய்ய வேண்டிய தேவை ஒரு படைப்பாளிக்கு கிடையாது என்றே நான் சொல்வேன்.

அது தவிரவும் அவ்வாறு யுத்தக் காட்சிகளை உட்புகுத்துவது நாங்கள் பார்த்து பார்த்து சலித்த மலின சினிமா உத்தியாகவே மாறிப்போகும் அபாயமும் தவிர்க்கப்பட்டிருக்கின்றது.

யுத்தமும் வலி நிறைந்த அதன் கோர முகமும் பாதிக்கப்பட்டவர்களின் வார்தைகளின் ஊடாகவும் அவர்களின் நடவடிக்கைகள் மூலமாகவும் சொல்லப்பட்டுள்ளமை இதனை வேறுபட்ட சினிமாவாக அடையாளப்படுத்தியிருக்கின்றது.

ஆவணப்படத்திற்கும் வெகுஜன சினிமாவிற்கும் இடையிலான பாதையில் இது பயணிக்கின்றது.அது ஆபத்தான பயணம் தான் என்பதை சில இடங்களில் பார்வையாளனும் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

யுத்தம் என்பது இன மத வேறுபாடுகள் கடந்தது, கண்டங்கள் கடல்கள் தாண்டியும் அது ஒரே மாதிரியான விளைவுகளையே ஏற்படுத்திவருகின்றது என்பதற்கான குறியீடாக இந்த திரைப்படத்தில் சூடானில் இருந்து வெளியேறி கனடாவில் வாழும் ஒருவரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்படுகின்றது.

எங்களில் பலருக்கும் இருக்கும் குழப்பகரமான மனப் போக்கும் அது சார்ந்து எழும் பிரச்சினைகளும் அது மற்றவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதையும் கோபியின் பாத்திரத்தின் ஊடாக இயக்குனர் பதிவு செய்கின்றார்.
பாரம்பரிய வாழ்வியல் சூழலுக்குள் இருந்து வேர்பிரித்து வீசப்பட்ட ஒரு தலைமுறை நவீன வாழ்கைச் சூழலையும் அதன் போக்கினையும் புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பதையும் அதன் விளைவுகள் மரணத்தில் சென்று முடிவதையும் அழுத்மாகவே பதிவு செய்திருக்கின்றது இந்த திரைப்படம்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, ஒருபாலின உறவு என எங்கள் சமூகம் தள்ளி நின்று பார்க்கின்ற அல்லது பார்க்க முனைகின்ற பக்கங்களை இந்த திரைப்படம் மிகவும் துணிவோடு கையாண்டிருக்கின்றது.

இந்த கதையின் மையமாக கதைகளை இணைக்கும் பாலமாக மதிவாசனின் பாத்திரம் கதையோட்டத்தின் இடையறாத தன்மையை பேணுவதற்கு பெரிதும் உதவியாக அமைகின்றது.

இறுதியாக இது தமிழர்களின் இருண்ட பக்கங்களை மட்டுமே பேசுவதாக எழும் ஒரு சில விசமத்தனமான விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல் கடந்து போவதே நல்லது என்று நான் கருதுகின்றேன்.

இந்திய சினிமாவின் தந்தையாக கொண்டாடப்டும் சத்தியஜித்;ரேயின் படைப்புகள் இந்தியர்களின் மோசமான வாழ்வியலை பேசுவதாகவும் அவர் இந்தியாவின் வறுமையை விற்று காசு பார்த்ததாகவும் கூட விமர்சிக்கப்படுகின்றார்.ஆனால் அதனையும் தாண்டி அவரின் படைப்புகள் காலங்களை கடந்தும் வாழ்கின்றன என்ற உண்மையை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு படைப்பு என்பது எப்போதும் சந்தோசப் பக்கங்களையும் நல்ல முகத்தையும் மட்டுமே காட்ட வேண்டும் என்ற எந்த விதிமுறைகளும் கிடையாது. எனக்கு பிடிப்பதையும் எனக்கு சரியென படுவதையும் படைக்குமாறு எந்த ஒரு படைப்பாளிக்கும் எவரும் கட்டளை போட முடியாது.

விடுதலைக்காக போராட தொடங்கிய போராட்ட அமைப்புகள் தமது அமைப்பிற்குள்ளும் விடுதலைக்காக போராடிய மாற்று அமைப்புக்களுடனும் பேராட வேண்டிய கசப்பான நிலையை நாங்கள் வசதி கருதி மறந்து விடக் கூடாது.

இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவுகளுக்கு இருக்கும் அதே விதமான இழப்பும் வேதனையும் தான் சகோதர இயக்க படுகொலைகளில் பலிகொள்ளப்பட்டவர்களின் உறவுகளுக்கும் இருக்கும் என்பதை நாங்கள் கவனிக்க தவறிவிடுகின்றோம்.

அவர்களின் வலிகளை பேசாமல் விடுவதன் ஊடாக  அல்லது அதனை மறந்துபோய் கடந்து செல்வதில் எங்களை உத்தமர்களாக அடையாளப்படுத்த முனையும் வரலாற்று தவறை நம்மில் சிலர் இப்போதும் செய்து கொண்டே தான் இருக்கின்றோம்.

இயக்கம் ஒன்றில் பயிற்சி முகாமில் இருந்து தப்பிச் செல்ல முனையும் அல்லது மாற்று அமைப்புக்களோடு தொடர்புகளை கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் போராளிகளை அடித்தே கொலை செய்யும் இரும்பன் என்ற ஒரு இயக்கப் பொறுப்பாளர் தான் நம்பிய போராட்டத்தையும் தன்னை நம்பிய போராளிகளையும் அங்கே கைவிட்டு கனடாவிற்கு தப்பி ஓடிவந்து வந்து கோப்பை கழுவிக் கொண்டிருப்பது எங்கள் எல்லோர் மீதுமான நியாயமான விமர்சனம் தான்.

அங்கிருந்து தப்பி இங்கு வந்த பின்னர் இங்கிருந்த கொண்டு அங்குள்ள மக்களுக்கு அரசியல் வகுப்பெடுக்கும் அயோக்கியத் தனங்களை நம்மில் சிலர் இப்போதும் செய்து கொண்டு தானே இருக்கின்றார்கள்.

ஏனைய குடும்பங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முற்படும் ஒருவர் தனது குடும்பத்தின் மீது சரியான அக்கறை கொள்ளாமல் இருப்பதையும் அதனால் அவர் எதிர்கொள்ளும் விபரீதமும் எங்களில் பலருக்கான பாடம்.
தாயில்லாமல் வளரும் குழந்தை அதனை கவனிக்க நேரமில்லாமல் சமூக சேவை செய்யும் தந்தை தந்தையின் வரவிற்காகவும் அரவணைப்பிற்காகவும் ஏங்கி தவிக்கும் குழந்தை அந்த ஏக்கம் ஏற்படுத்தி நிற்கும் விளைவு என கனமான செய்தியினை இந்த திரைப்படம் பதிவு செய்கின்றது.


வேலை வேலை என்று குடும்பம் பற்றி கவலை கொள்ளாமலும் குழந்தைகள் பற்றி அக்கறைப்படாமலும் ஓடிக் கொண்டிருக்கும் எம்மில் பலர் விடும் தவறுகள் எவ்வாறான பின்விளவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான எச்சரிக்கை மணியை உரத்து ஒலிக்கச் செய்திருக்கின்றார் லெனின்.

இன்னும் கொஞ்சம் வேகமாக காட்சிகள் நகர்ந்திருக்கலாம் என்பதும் பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதும் எனது தனிப்பட்ட கருத்தாக அமையும்.

தாய் நிலத்தில் இருந்து வேரிழந்து வந்து விழுந்திருக்கும் ஒரு இனக் குழுவான ஈழத் தமிழர்கள்; எங்கள் இருப்பையும் அடையாளங்களையும் பதிவு செய்யும் முயற்சிகளின் முக்கிய முன்னகர்வாக இதனை பார்க்க வேண்டும்.

பெருவணிகமாக மாற்றம் கண்டு நிற்கும் தென்னிந்திய சினிமாவைப் பார்க்கும் வெகுஜனக் கண்களால் இவ்வாறான திரைப்படங்களை பார்ப்பதை தவிர்த்துக் கொண்டால். இது கொண்டாடப்பட வேண்டிய ஒரு திரைப்படமாக நமது படைப்பாக இருக்கும்.


Friday, February 1, 2013

இசையின் சங்கமம்...Tunes of Passion


தேசம் தாண்டுதல் என்பது மனிதர்களை பொறுத்தவரை வலி சுமக்கின்ற நிகழ்வாகவே இருக்கும்.

ஓடி விளையாடி கூடிக் களித்த மண்ணில் இருந்தும் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் என அத்தனையும் தொலைத்து விட்டு முற்றிலும்; அந்நியமான வாழ்க்கைச் சூழலுக்குள் பிடுங்கி வீசப்படுதல் என்பதும் கூட ஒரு வகை மரணம் தான்.

எத்தனை எத்தனை வசதிகள் வாய்ப்புகள், பாதுகாப்பு,கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் இன்னும் இன்னும் பலவாய் விரியும்; காரணிகளை புலம்பெயர் தேசங்களில் அனுபவிக்க முடிகின்ற போதிலும் தாய் மண்ணின் மணம் வீசும் காற்றினை தொலைத்தல் என்பது கொடுமையானது.

அவ்வாறாக இழத்தலில் உயிர்க்கும் புதுவாழ்வில் தாய் மண்ணில் நாம் வாழ்ந்த நினைவுகளையும் தாய் மண் தந்து போன சுகங்களையும் கொஞ்சம் கொஞ்சமாய் கொண்டு வருவது இங்கும் அழிந்து போகாமல் தொடரும் எங்கள் கலைகளும் பாராம்பரியங்களும் தான்.


இங்கு பிறந்து வாழும் அடுத்த  தலைமுறை தமிழ் பற்றிய அறிதலையும் புரிதலையும் கொண்டிருப்பதற்கு காரணம் இங்குள்ள ஊடகங்களினதும் கலைஞர்களினதும் அர்பணிப்புடனான பங்களிப்பு என்பது மிபை;படுத்தப்படாத உண்மை.

தமிழின் எதிர்கால இருப்பிற்கான முனைப்புகளுக்கு தமிழர்கள் வழங்கும் ஆதரவு என்பது இன்னும் கேள்விக்குரியதாகவே இருக்கின்றது.

இலங்கையில் ஊடகச் சூழலில் பல வருடங்கள் வாழ்ந்தவன் அங்குள்ள பெரும்பாலான கலைஞர்களோடும் தொடர்புகளை கொண்டிருந்தவன் என்ற வகையில் தேசம் தாண்டியும் நீளும் கலைஞர்களின் சோகங்களை இங்கும் உணர முடிவது வேதனையானது தான்.

அங்கு ஒரு இசைத் தொகுப்பை வெளியிடுவதற்கு ஒவ்வொரு கலைஞனும் சந்திக்கும் அத்தனை சவால்களையும் வசதி வாய்ப்புகளில் பல படி மேலாங்கி நிற்கும் இந்த மண்ணிலும் அவர்கள் சந்திக்கின்றார்கள் என்ற கசப்பான உண்மையினை மனது கனக்கும் வேதனைகளோடு பதிவு செய்கின்றேன்.


இங்கு வாழும் நம் கலைஞர்கள் ஒவ்வொருவரும் தாம் சார்ந்த கலைத்துறைக்கு தம்மை முழுமையாக அர்பணித்துக் கொள்ள முடியாதவர்களாகவே இருக்கின்றார்கள்.

அது இங்குள்ள வாழ்கைச் சூழலின் தாக்கம் சார்ந்த ஒன்றாகவே இருக்கின்றது.
இயல்பு வாழ்விற்காய் ஒன்றிற்கும் மேற்பட்ட பணிகள் குடும்ப நலன் சார் தேவைகளின் கவனிப்பு வார விடுமுறை கொண்டாட்டங்கள் என நின்று பேசவும் நேரமின்றி அலையும் வாழ்கை தான் இங்கே வாய்க்கின்றது.ஆனால் அத்தனை நெருக்கு வாரங்களையும் தாண்டி தங்களுக்கும் புதைந்திருக்கும் கலைத் தாகத்தையும்; தமிழ் மீதான காதலையும் வெளிப்படுத்த முனையும் ஏரானமான படைப்பாளிகளை சந்திக்க முடிவதில் சந்தோசம்.

நான் தற்போது பணியாற்றி வரும் வணக்கம் எப்.எம் வானொலி ஊடாக பிரதி சனிக்கிழமைகளில் எமது கலைஞர்களோடு உரையாடவும் அவர்களின் கதைகளை பேசுவதற்குமான நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது.

ஊடகத்துறையில் நான் மிகவும் விரும்பி நேசிக்கும் நிகழ்சிகளில் ஒன்றாக நான் பேச நினைப்பதெல்லாம் எப்போதும் இருக்கின்றது.

சூரியனில் பணியாற்றி காலங்களில் இலங்கையின் புகழ் பூத்த பாடகிகளில் ஒருவராக நித்தியா மகிந்தகுமார் அவர்களுடன் இணைந்து இது போன்ற நிகழ்சியினை நடத்தியிருந்தேன்.

அந்த நிகழ்ச்சி வேறு எதுவும் தந்து விட முடியாத மன நிறைவை தந்திருந்தது அதே போன்ற ஒரு நிகழ்சியினை இங்கும் நடத்தும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

இங்கு புலம்பெயரந்து வாழும் கலைஞர்களையும் இங்கு பிறந்து வளர்ந்த அடுத்த தலைமுறை கலைஞர்களையும் சந்திக்கும் சந்தர்ப்பத்தை அது எனக்கு ஏற்படுத்தி தந்துள்ளது.

அவ்வாறு நான் சந்தித்த கனடாவின் முக்கிய பாடகர்களின் ஒருவரான பிரபா பாலகிருஸ்ணன் மூலமாக மேலும் பலரை அறிமுகமாக்கிக் கொண்டேன்.
அவ்வாறு கிடைத்த அனுபவங்களில் ஒருவர் தான் Steve Cliffஜேர்மனியில் பிறந்து வளர்த தமிழ் இளைஞர்.மூன்று வயதில் இசை மீதான காதலில் விழுந்தவர் அப்போதே அங்குள்ள இசைப் பள்ளியில் சேரக்கப்பட்டார்.

இசைக்கலைமணி தர்மினி தில்லைநாதனிடம் முறைப்படி சங்கீதமும் கற்றவர்.

10 வது முதல் ஜேர்மனியில் உள்ள இசைக் குழுக்களில் பாடகராக தனது இசைவாழ்வை தொடர்நதவர் 750 ற்கும் அதிகமான மேடைகளை தனது இசையால் அலங்கரித்திருக்கின்றார்.

பாடகராக மட்டும் நின்றுவிடாது ஒரு தாளவாத்திய கலைஞனாகவும் மிளிர வேண்டும் என்ற ஆர்வத்தில் தனது 6 வயதில்  Drums வாத்தியத்தை பயில ஆரம்பித்தவர் அதன் தொடர்சியாக அமெரிக்க மற்றும் ஆபிரிக்க தாள வாத்திய கருவிகளை இசைப்பதற்கும் பயிற்சிகனை பெற்றுக் கொண்டவர்.

இதனால் ஜேர்மனிய இசைக் குழுக்களோடு இசை நிகழ்சிகளை நடத்தும் வாய்பினையும் ளுவநஎந ஊடகைக பெற்றுக் கொண்டார்.

தனது இசை வாழ்வின் அடுத்த அத்தியாயத்தை ஒரு இசை ஆசிரியனாய் தொடர்ந்த Steve Cliff ஜேர்மனியில் வாழும் பல சிறுவர்களுக்கு இசைப் பயிற்சியினை வழங்கியுள்ளார்.

தனது 16வது வதில் ஒரு இசையமைப்பாளாய் உருவெடுத்த Steve Cliff இன்று வரை பல நூறு பாடல்களை பல்வேறு இசைத் தொகுப்புகளில் படைத்திருக்கின்றார்.

Steve Cliff கனடாவிற்கு புலம்பெயர்ந்துள்ள நிலையில் இங்குள்ள முன்னணி பாடக பாடகிகளோடு இணைந்து படைத்துள்ள இசையின் சங்கமம் Tunes of Passion  என்ற இசதை் தொகுப்பு இங்கே இம்மாதம் 3ம் திகதி வெளியிடப்படுகின்றது.கனடாவில் உள்ள முன்னணி பாடகர்கள் பாடகிகள் அனைவரும் சங்கமிக்கும் முதலாவது இசைத் தொகுப்பாக இதனை கருத முடியும்.

இசைக்காகவே தன்னை அர்ப்பணித்த ஒரு இளைஞனின் சாதனை முயற்சிக்கு நாங்கள் ஆதரவளிக்க வேண்டியது காலத்தின் கடமையாகின்றது.

இங்குள்ள கலைஞர்களை ஒன்றிணைப்பதும் அவர்கள் மூலமாக ஒரு இசைத் தொகுப்பை கொண்டு வருவது என்பதும் இந்த வாழ்கைச் சூழலைப் பொறுத்த வரையில் மிக மிகக் கடினமானது.

தனது கடினமான உழைப்பால் சாவல்களை தாண்டி அதனை அவர் வெற்றிகரமான படைப்பாக வெளிக் கொண்டு வந்துள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரியது.ஆனால் இது போன்ற முயற்சிகளுக்கு இசை இரசிகர்களாகவும் அனுசரணையாளர்களாகவும் நாங்கள் போதுமான ஆதரவை வழங்குகின்றோமா என்பது இன்னும் பதிலிடப்படாமல் இருக்கும் கேள்வியாகவே எம்மை தொடர்கின்றது.

ஆனாலும் ஒரு ஊடகம் என்ற வகையில் ஒவ்வொரு மணி நேரமும் இது "எங்கட பாட்டு" என்று வணக்கம் எப்.எம் நமது படைப்புகளை ஒலிபரப்பி வருகின்றமை பெருமைக்குரிய விடயமாக இங்கே பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது.

இது போனதுமானது அல்ல என்ற ஆதங்கம் எங்கள் எல்லோருக்கும் இருக்கின்ற போதிலும் எதிர்காலத்தில் அதற்கான பதிலை நாம் வழங்குவோம் என்பதை மட்டுமே இப்போது இங்கே பதிவிட முடிகின்றது.

எமது கலைப்படைப்புகளுக்கும் எமது கலைஞர்களுக்கும் நாங்கள் தரும் ஊக்கம் என்பது அவர்களின் இசையை அவர்களின் கலையை இரசிப்பதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது.

இது போன்ற படைப்புகள் தொடர்ந்து வெளிவருவது என்பதன் பின்னணியில் பொருளாதாரம் என்ற பலம் பொருந்திய காரணி ஒன்று இருக்கின்றது என்பதை நாங்கள் எவரும் மறந்து விட முடியாது.

இங்கு வாழும் மனிதர்களின் வாழ்வு மணித்துளிகளால் ஆனது இங்குள்ளவர்களின் வருவாய் என்பது மணித்தியாலங்காளல் நிச்சயிக்கப்படுகின்றது.

அவ்வாறான சூழலில் இசைக்கும் கலைக்கும் ஒருவன் தன்னை அர்பணித்தல் என்பது அவனின் மாத வருமானத்தில் சில நூறு வெள்ளிகளின் இழப்பின் அடையாளமாகவே கொள்ளப்பட வேண்டியுள்ளது.

இந்த நிலையில் வெளிவரும் ஒவ்வொரு படைப்பும் அவர்களின் உழைப்பிற்கும் முயற்ச்சிக்குமான குறைந்த பட்ச பெறுதியினையாவது அவர்களுக்கு மீளளிக்க வேண்டும் என்பது தான் எங்களின் ஆதங்கம்.

இங்கு வாழும் நம்மவர்கள் அவர்களின் இசைத் தொகுப்பினை பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்வதன் மூலம் அதற்கான சந்தைப் பெறுமதியை அதிகரிக்க முடியும்;.

அதன் மூலம் இது போன்ற படைப்புகள் எங்கள் மத்தியில் பரவலான சந்தையினையும் அதன் ஊடான வருமான ஈட்டத்தையும் பெற்றுக் கொள்ளும்.

கலைஞர்கள் கலை ஈடுபாட்டிற்காக ஒரு சில முயற்சிகளை முன்னெடுக்கலாம் ஆனால் அது முறிந்து போகாமல் தொடரவும் புதிய புதிய வரவுகள் நிகழவுமான சூழலை நுகர்வோராக நாம் அனைவரும் ஏற்படுத்த வேண்டும்.

ஒரு இசைத் தொகுப்பு என்பதற்கு அப்பால் அங்கள் மொழி இனம் சாந்த அடையாளம் ஒன்றின் இருப்பிற்கான முயற்சியாக அதனை நாங்கள் கருத வேண்டும்.

அது போல் இங்குள்ள வர்த்தக நிறுவனங்களும் தொழில் முனைவோரும் இது போன்ற முயற்சிகளுக்கு அனுசரணையளிப்பதன் மூலம் இது போன்ற படைப்புகள் வெளிவருவதற்கான சூழலை உருவாக்க முடியும்.

இந்த முயற்சிக்கும் பலர் தமது ஆதரவை வழங்கியிருக்கின்றார்கள் அது போல் மேலும் மேலும் பல புதிய படைப்புகள் உருவாக்கப்படுவதற்கும் ஏனையவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றியமையாததாகின்றது.

எமது அடுத்த தலைமுறை தமிழ் பேசுமா ? மெல்லத் தமிழினச் சாகுமா என்பதற்கான விடையினை வேறெங்கும் தேடாமல் எங்களுக்குள் தேடுவோம் பதிலாக நாங்களும் எங்கள் எதிர்கால நடவடிக்கைகளுமே அமையும்.

வெற்றிக்கு வாழ்த்துவோம் இசையும் தமிழும் இன்னும் வாழட்டும்Tuesday, January 22, 2013

நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ?


நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? நாயகன் திரைப்படத்தில் இடம்பெற்ற பிரசித்தமான உரையாடலின் வலிமிகு வரிகள் இவை.

இந்த வரிகளின் பின்னால் மறைந்திருக்கும் உண்மையும் அது ஏற்படுத்தும் அதிர்வுகளும் வாழ்கை குறித்த புரிதலின் அடிப்படையானவை.

உண்மையில் ஒவ்வொரு மனிதனின் உள்ளும் நல்லவனும் கெட்டவனும் வெட்டிப் பிரிக்க முடியாத இரட்டையர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

எந்த ஒரு மனிதனும் நான் நல்லவன் என்று மார்தட்டிக் கொள்ள முடியாதபடிக்கு செவியில் அறையும் மறுமுகம் ஒன்று அவனுக்குள் இருக்கின்றது என்பது தான் யதார்தம்.

அவ்வாறு என்னால்  அல்லது செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் முதலில் மன்னிப்பு கோரிவிடுகின்றேன்.

என்னளவில் நான் நல்லவனாகவே உணர்கிறேன். ஆனால் எனது நடவடிக்கைகள் சிலரை காயப்படுத்தியிருக்கக் கூடும் என்பதை காலமாற்றங்கள் புரிய வைத்து விடுகின்றன.

அது தற்செயலானதாய் அல்லது பின் விளைவுகள் குறித்து அறிந்து கொள்ளும் ஆற்றல் அற்ற தன்மையினால் மேற்கொள்ளப்பட்ட தவறுகளினால் ஏற்ட்டிருக்கலாம். அல்லது திட்டமிட்டு வேண்டும் என்றே காயப்படுத்தும் நோக்கம் கொண்டதான செயலின் விளைவாக இருந்திருக்கலாம் எது எப்படி இருந்தாலும் தவறு தவறுதான் என்பது உணர்கிறேன்.நாங்கள் தெரிந்தோ தெரியாமலோ மற்வர்களுக்கு சில வேளைகளில் கெடுதல்களை ஏற்படுத்தி விடுகின்றோம்.

அதனை உணர்ந்து கொள்ளாமல் நாங்கள் நல்லவர்கள் என்ற இறுமாப்புடன் வாழ்வது தான் எங்களின் வாழ்கை முறையாக இருக்கின்றது.

எந்த ஒரு மனிதனும் பிறப்பு முதல் இறப்பு வரை முற்று முழுதாக நல்லவனாகவோ கெட்டவனாகவோ வாழ்ந்து விட முடிவதில்லை என்பதே காலம் உரத்துச் சொல்லிப் போகின்ற செய்தியாக இருக்கின்றது.

நாங்கள் கைதொழும் ஞானிகளும் மகான்களும் இறை அவதாரங்களும் கூட அவர்களின் வாழ்வின் சில காலப் பகுதிகளில் நல்லவர்களாய் இருக்க முடியாமல் போனதை காலம் பதிவு செய்திருக்கின்றது.

நாம் சந்திக்கும் மனிதர்களும் சந்தர்ப்பங்களும்  எங்களின் முகம் எத்தகையது என்பதை தீர்மானிக்கின்றன.

உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த மிக மிக நல்ல மனிதர் யார் என்று ஒரு கணம் சிந்தித்து பாருங்கள் .. அதேபோல் நீங்கள் சந்தித்த மிக மோசமான மனிதன் யார் என்றும் யோசனை செய்யுங்கள்.

இது மிகவும் சிக்கலானது எங்கள் பார்வைப் புலத்தில் நல்லவராக தெரியும் ஒருவர் மற்றவரின் பார்வைக் கோணத்தில் கெட்டவராக மாறிப் போகின்றார்.
அதேபோல் நாங்கள் கெட்;டவர் என்று வெறுத்து ஒதுக்க நினைக்கும்
ஒருவரை வேறு சிலர் நல்லவராக கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.

எங்கள் பார்வை தான் மற்றவர் நல்லவரா கெட்டவரா என்பதை தீர்மானிக்கின்றது.நான் மட்டும் வாழ வேண்டும் என்று நினைக்கும் எண்ணங்களை கொண்டவர்களுக்கு அதே எண்ணங்களுடன் வாழ்பவர்கள் நல்லவர்களாக தெரிகின்றார்கள்.

எல்லோரும் வாழ வேண்டும் என்றும் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமே என்றும் நினைப்பவர்கள் மற்றவர்களுக்கு குழப்பவாதிகளாகவும் கூடாதவர்களாகவும் தெரிகின்றார்கள்

இது தான் உலக நியதியாக இருக்கின்றது. நாங்களும் இதற்கு விதிவிலக்கனாவர்கள் அல்ல.

மனதளவில் ஒவ்வொருவனும் தான் நல்லவன் என்றே எண்ணம் கொள்கின்றான்.

நாங்கள் எவரும் மற்றவர்களுக்கு தீமைகள் செய்வதாய் ஒருபோதும் உணர்வதில்லை.

மற்றவர்கள் மீது துன்பச் சிலுவைகளை நாங்கள் இறக்கி வைக்கின்ற போது எமக்கு ஏற்படும் அல்லது ஏற்படப் போகும் நன்மைகள் குறித்து மட்டுமே நாங்கள் சிந்திக்கின்றோம்.

அதனால் மற்றவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் குறித்தும் இழப்புகள் குறித்தும் சிந்திப்பதற்கும் கவலைப்படுவதற்கும் எங்களுக்கு நேரமிருப்பதில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற சம்பவம் இது.நான் பணிபுரிந்த இடம் ஒன்றில் ஒரு சிறப்பு நிகழச்சிக்காக சிலரை அழைத்து வந்திருந்தோம்.
நிகழ்ச்சி நிறைவடைந்து அனைவரும் வெளியேறிய பின்னர் நாங்கள் துப்பரவுப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது தான் ஒரு விடயத்தை அவதானித்தோம்.

அலுவலக கழிவறையில் கை கழுவுவதற்கான தொட்டியின் நீர் வெளிறேயும் துவாரத்தை கழிவறை கடதாசியால் அடைத்து விட்டு அதனுள் சிறுநீரை கழித்து விட்டு ஒருவர் சென்றிருக்கின்றார்.

எத்தனை வக்கிரம் அவரிடத்தில் இருந்திருந்தால் அவர் அப்படி ஒரு செயலை செய்திருப்பார் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டியிருந்தது.

இத்தனைக்கும் அது ஒரு விவாதமோ கருத்தரங்கோ ஒருவரை ஒருவர் வசைபாடி மனதை திருகும் வலிகள் தரும் நிகழ்சியோ அல்ல.

அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்துவதற்கான ஒரு சாதாரண நிகழ்ச்சி தான் நடைபெற்றிருந்தது.

அதில் எவர் மனமும் புண்படியான எந்த ஒருவிடயமும் எங்களுக்கு தெரிந்த அளவில் நடைபெறவில்லை என்றே நாங்கள் நம்புகின்றோம்.
ஆனாலும் அதில் கலந்து கொள்ள வந்த ஒருவருக்கு அப்படி ஒரு வன்மத்தை தீர்த்துக் கொள்ளும் அளவிற்கான தீமையினை நாங்கள் செய்திருக்கின்றோமா என்ற கேள்வி எழுகின்றது.

இப்போது சொல்லுங்கள் நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ?
அவ்வாறான ஒரு மனநிலை அவருக்கு எங்கள் அலுவலகத்தில் ஏன் ஏற்பட்டது என்பது அவதானமான சிந்தனைக்குரியது.

அவர் யார் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்பது இன்று வரை எங்களுக்கு தெரியாது.

இதனை ஏன் இங்கு பதிவு செய்கின்றேன் என்றால் எங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கின்ற அந்த தீய மனிதன் எதனையும் செய்யக் கூடிய ஆற்றல் பெற்றவன் என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக.நாம் செய்கின்ற விடயங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் பின் விளைவுகள் பக்க விளைவுகள் பற்றிய கவலைகள் இன்றி துணிவுடன் ஒரு விடயத்தை செய்து முடிகின்ற உறுதி கொண்ட ஒருவன் எங்களுக்குள் வாழ்கின்றான்.
சந்தர்ப சூழ்நிலைகள் அவன் வெளியேற விடாமல் அவை எங்களுக்கு அடக்கி பூட்டி வைத்திருக்கின்றன.

தன்னைத் தான் காதலன் ஆயின், எனைத்து ஒன்றும்
துன்னற்க, தீவினைப் பால்!

என்ற வள்ளுவன் வாக்கு வாழ்கைக்கு மிகவும் இன்றியமையாததாகின்றது.
தெரிந்தோ தெரியாமலோ மற்றவர்களை காயப்படுத்தாத வாழ்கையை வாழ வேண்டும் என்றே நாங்கள் எல்லோரும் நினைக்கின்றோம்.
ஆனால் அது சாத்தியமாவதில்லை வேலை முடிந்து வீட்டிற்கு வந்து அப்போது தான் மனைவி குழந்தைகளோடு ஒன்றாக உணவருந்துவதற்கு உட்காருகின்றீர்கள்.

அந்த வேளையில் உங்கள மேலதிகாரியிடம்; இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று வருகின்றது.

உங்களிடம் இருக்கும் தெரிவுகள் இரண்டு ஒன்று உணவு மேசையில் எழுந்து இருந்து சென்று மேலதிகாரியின் அழைப்பிற்கு பதிலளிப்பது. அல்லது அந்த அழைப்பை புறக்கணித்து விட்டு உணவை உட்டகொள்ள தொடங்குவது.
இந்த சம்பவத்தில் நீங்கள் எடுக்கும் முடிவு ஒரு தரப்பிற்கு உங்களை நல்லவராகவும் மறு தரப்பிற்கு கெட்டவராகவும் உங்களை சித்தரிக்கும்.
அது எதுவாக இருந்தாலும் அதன் தாக்கத்தை தாங்க வேண்டியவர்கள் நீங்கள் தான் என்பது தான் இங்கிருக்கின்ற உண்மை.

நீங்கள் உணவு மேசையில் இருந்து எழுந்து சென்று மேலதிகாரியின் அழைப்பிற்கு பதிலளிக்கின்றீர்கள் என்று வைத்துக் கொண்டால் நீங்கள் எழுந்து செல்லுத் நொடியில் உங்கள் குடும்பத்தின் மீது அக்கறையற்ற மனிதராக நீங்கள் அந்த நேரத்தில் மாறிப் போவீர்கள். ஆனால் மேலதிகாரி சந்தோசப்படுவார் உண்மையான ஊழியர் என்று பெருமிதப்படுவார். நன்றி சொல்லுவார் குழப்பத்திற்கு மன்னிப்பு கேட்பார் தனது சந்தேகத்தை அல்லது பொழுது போகமால் இருக்கும் புழுக்கத்தை உங்களில் கொட்டி வைத்து விட்டு அழைப்பை துண்டித்து விடுவார்.

ஆனால் உணவு மேசையில் இருந்து நீங்கள் எழுந்து சென்ற போது அங்கு தோன்றிய குடும்பத்தை விட வேலையை அதிகம் நேசிக்கும் கணவன்... அப்பா... மகன் என்கின்ற தோற்றப்பாட்டை மாற்றுவதற்கு நீங்கள் அதிக நாட்கள் போராட வேண்டியிருக்;கும்.

மறுபுறம் எனக்கு குடும்பம் தான் முக்கியம் மேலதிகாரியை நாளை அலுவலகத்தில் சந்தித்துக் கொள்ளலாம் என்று நீங்கள் தீர்மானித்தால் குடும்பத்தினர் மத்தியில் நீங்கள் ஒரு படி மேல் உயர்வீர்கள்.

அடுத்த நாள் மேலதிகாரி விடும் டோஸ்களும் கோஸ்ட் கட்டிங் கதைகளும் உங்களை வேலையில் இருந்த தூக்குவதற்கான ஆயத்தங்களாகவே படும்.

ஆம் மேலதிகாரியை பொறுத்த வரை நீங்கள் பெறுபற்ற பணியாளர் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடுகின்றீர்கள்.

இந்த நிலை நம்மில் பலருக்கு அடிக்கடி ஏற்பட்டிருக்கும் இனியும் ஏற்படும். துரதிஸ்டவசமாக நம்மில்ட பலர் என்னையும் சேர்த்து தான் இரண்டாவது வழியை தெரிவு செய்வதே இல்லை.

ஏன் என்றால் பணி தொடர்பாக எமக்குள்ள தோன்றிவிட்டிருக்கும் பாதுகாப்பற்ற தன்மை அச்சம் எதிர்காலம் குறித்த ஏக்கம் என பல வித வியாக்கியானங்களை நாம் அதற்கு காரணியாக சொல்லிக் கொள்வோம்.
ஆனால் நாங்கள் பணியிடத்தில் இருந்து வரும் தொலைபேசி அழைப்பிற்கு பாய்ந்து விழுந்து பதிலளிப்பது என்பது குடும்பத்தை பொறுத்த வரை தம்மை உதாசீனம் செய்யும் ஒரு விடயமாகவே கருதப்படும். அவர்களின் மன நிலையில் அது சரியாகவே தான் இருக்கின்றது.தவறு எங்களில் தான் என்கின்ற ஆய்வுகள் நாங்கள் வேலையையும் வாழ்கையினையும் சரியான அளவுகளில் கலக்கத் தெரியாமல் தடுமாறிக் கொண்டிருப்பது தான் இந்த சமனிலைச் சிக்கலுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகின்றது.

ஒரு மனிதனுக்கும் இன்னுமொரு மனிதனுக்குமான தொடர்பு வெளி என்பது எப்போதும் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும்.

நாங்கள் உறவு கொண்டாடும் சக மனிதர்களுக்கும் எங்களுக்குமான கால எல்லையே நாங்கள் எவ்வாறனவர்கள் என்பதை மற்றவர்களுக்குள் பதிவு செய்கின்றது.

ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பதை அவன் நடத்தைக் கோலங்கள் தீர்மானிப்பதை விட அவனுக்கும் மற்றவர்களுக்குமான உறவு நிலைகளே தீர்மானிக்கின்றன.

நாங்கள் சந்திக்கும் நல்லவர்களின் உள்ளே ஒரு மறு உலகம் ஒன்று எங்களுக்கு தெரியாமல் ஒளிந்த கொண்டிருக்கும்.

எனக்கு தெரிந்த ஒருவர் பெரிய நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர். மிகவும் அன்பானவர் எளிமையானவர் பணியாளர்களுடன் பண்புடன் பழகும் சுபாவம் கொண்ட ஒரு நிர்வாகியாக அவரை நான் அறிந்து வைத்திருந்தேன்.

எந்த ஒரு தீய பழக்கங்களும் இல்லாம் மிகுந்த இறைபக்தி மகிக்வராக விளங்களி அவரை அந்த அலுவலகத்தின் பணியாளர்களம் ஏனைய தரப்பினரும்  மிக உயர்ந்த மனிதராக கொண்டாடியதை நான் நேரடியாகவே அவதானித்திருக்கிறேன்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பரபரப்பான வேளையொன்றில் செய்தித் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த போது அவரின் பெயரை எதேச்சையாக பார்க்க கிடைத்தது.
தனது மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தார்.

அந்த அறிக்கையை நான் முழுமையாக வாசித்துக் கொண்டிருந்த போது எனது மனதில் அவர் தொடர்பில் ஏற்படுத்தி வைத்திருந்த " நல்லவர் " என்ற விம்பம் கொஞ்சம் கொஞ்சமாக உடைந்த நொருங்கிக் கொண்டிருந்தது.

தனது அன்பான மனைவியை தனது ஆசைக் குழந்தைகளை கொலை செய்யும் அளவிற்கான வக்கிர மனம் அந்த நல்வரிற்குள் ஒழிந்திருக்கின்றது என்பது தான் யதார்த்தமான உண்மை.எங்கள் எல்லோருக்குள்ள வக்கிரங்கள் குரோதங்கள் வன்மகங்கள் என அத்தனை தீமைக் குறிகளுக்கும் அடைந்து கிடக்கின்றன.
தவிர்க்க முடியாத சூழல்கள் உருவாகும் போது அவை வெளிப்பட்டு விடுகின்றன.

சில வேளைகளில் எங்கள் தீய முகங்கள் தரும் போதை காரணமாக நாங்கள் தீய முகத்தோடு தொடர்ந்தும் பயணிக்கத் தொடங்கி விடுகின்றோம்.

நீங்கள் நல்லவரா ? கெட்டவரா ? பதில் தேடும் பயணம் இன்னும் தொடரும்...


Monday, January 14, 2013

முகம் தந்த மனிதருக்கு நன்றிகளுடன்...


கடந்து செல்லும் காலங்களில் நாங்கள் பல முகங்களை மறந்து விடுகின்றோம் அல்லது அந்த முகங்கள் எங்கள் மனங்களில் இருந்து விலகிச் சென்றுவிடுகின்றன.

எங்கள் வளர்ச்சியிலும், உயர்ச்சியிலும் பங்கெடுத்த முகங்களும் கால ஓட்டத்தில் எங்கள் மனங்களில் இருந்து காணமால் போய் விடும் துயரங்களும் நிகழ்வாகின்றன.நான் ஒலிபரப்புத் துறையில் எதனையும் பெரிதாக சாதிக்கவில்லை என்பது எனக்கு நன்றாகவே தெரியும்.

எனினும் வானொலி நிகழ்சிகளின் போதோ சந்திப்புகளின் போதோ சிலர் எனது ஒலிபரப்பு குறித்து தெரிவிக்கும் பாராட்டுகள் என்னை குற்ற  உணர்ச்சி கொள்ளச் செய்கின்றன.

இந்த பாராட்டுகளையும் வாழ்துக்களையும் எனக்கான அடையாளத்தையும் ஏற்படுத்தி தந்து விட்டு மௌனமாக கடந்து போகின்ற அந்த ஓரு மனிதர் குறித்து நான் என்ன செய்யப் போகின்றேன் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கின்றது.

எனக்கு கிடைக்கும் பாராட்டுகளுக்கும் வாழத்துகளுக்கும் முழு முதல் காரணமானவர் அவர்.

கால ஓட்டத்தில் அவரின் முகம் சில வேளைகளில் எங்கள் மத்தியில் இருந்து மறந்து போகலாம் ஆனால் அவர் ஏற்படுத்தி விட்டுள்ள வானொலிக் கலாசாரம் என்றும் அவரின் பெயரை உரத்துச் சொல்லியவாறே இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகின்னேறன்.

இது பல காலமாக எழுதப்படாமலே விடப்பட்ட ஒரு பதிவு.எப்படி எழுதியும் என்ன செய்தும் கடன் தீர்க்க முடியாத ஒருவருக்கான காணிக்கை.
எனக்குள் இருக்கின்ற ஆதாங்கத்திற்கான வடிகாலாகவும் இதனை கருதிவிடலாம்.

சமகால மூத்த தமிழ் மொழி ஒலிபரப்பாளர்களில் ‘உலக அறிவிப்பாளர்’ என்கிற அடைமொழிக்கு மிகப் பொருத்தமானவர் யார் என எனைக் கேட்டால், திருவாளர் சி. நடராஜசிவம் என்பது எனது பதிலாக அமையும்! என்று நண்பர் மப்ரூக் கூறுவது மிகைப்படுத்தப்படாத உண்மை.இன்று என்னைப் போல் பலரை ஏதுமற்ற  நிலையில் இருந்து சில உயரங்கள் வரை உயரத் தூக்கி விட்டவர் திருவாளர் நடராஜசிவம் அவர்கள்.

வெறுமனே ஒரு வானொலி அறிவிப்பாளனாக இல்லாமல் முழுமையான ஒலிபரப்பாளன் எப்படி இருக்க வேண்டும் என்ற குறியீடாக தமிழ் ஒலிபரப்புத் துறையில் பிரகாசிப்பவர் அவர்.

கடந்த பல வருடங்களாக அவரை வழி தொடரும் ஒரு மாணவன் என்ற வகையில் இதனை அழுத்தமாக என்னாலும் கூற முடிகின்றது.

ஒலிபரப்புத் துறையின் எனக்கு ஆதர்சமானவர் அவர். ஓரு ஒலிபரப்பாளனின் வெற்றிக்கு குரலை விட முக்கியமான காரணிகள் பல இருப்பதை எனக்கும் புரியவைத்தவர்.

வெறுமனே திரைப்படப் பாடல்கள் குறித்தும் திரைப்படங்கள் திரைப் பிரபலங்கள் குறித்தும் அறிந்து கொண்டு குறுகிய வட்டத்திற்குள் சுற்றி வரும் அறிவிப்பாளர்களின் மாய வட்டத்தில் இருந்து அவர் எப்போதோ வெளியேறியிருந்தார்.

தமிழ் திரையுலகம் தாண்டி உலக சினிமா வரை ஆழமான புரிதலை கொண்டிருக்கின்றார் அவர்.

இதிகாசங்கள் முதல் நவீன இலக்கியங்கள் வரையான அவரின் வாசிப்பு முழு நேர இலக்கியவாதிகளுக்கு இணையானது.

இசை,இலக்கியம், பொழுது போக்கு, அரசியல்,விளையாட்டு தொழில்நுட்பம் என எந்த துறையிலும் உள்ள விடயங்களை ஆழமான அறிவோடு எடுத்தாளும் திறமை மிக்கவனே முழுமையான ஒலிபரப்பாளன் என்பது தான் அவரின் கோட்பாடாக இருந்தது.

அதனை அவர் முழுமையாக நம்புகின்றார் இதனால் அதன் வழி அதனை பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்.

தாமாக உருவாக்கிய மாய உலகத்தில் தமக்காக உருவாக்கப்பட்ட விம்பங்களை பாதுகாப்பதற்காக இயல்பு மீறி இயங்கும் சிலரையும் நான் சந்தித்திருக்கிறேன்.

ஆனால் அந்த மாயங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தனது இயல்பினை எதற்காகவும் எவருக்காகவும் இழக்காமல் வெற்றி பெற்ற மனிதர் நடராஜசிவம்.

அவர் ஒலிப் பதிவுகளின் போது காண்பிக்கும் வித்தியாசமான பாவங்கள் பிரசித்தமானவை அவை பார்பவர்களுக்கு சிரிப்பினை வரவளைத்து விடும தன்மை கொண்டவை.

ஆனால் அந்த ஒலிப்பதிவினை கேட்கும் போது அதில் இருக்கும் ஜீவனை கேட்போன் உள்வாங்கிக் கொள்வதற்கு அந்த வெளிப்பாடு தான் காரணமாக அமைந்திருக்கும்.

ஒரே பாணியில் கட்டமைக்கப்பட்ட விளம்பர உத்திகளை உடைத்தெறிந்தவர் நடா அண்ணா என்று விளம்பரத் துறையில் உள்ளவர்கள் அடிக்கடி கூறி வருவதை நான் பல தடவைகள் கேட்டிருக்கிறேன். அது முற்றிலும் உண்மையானது.

ஒவ்வொரு விளம்பரமும் மற்றொன்றின் சாயலின்றி இருக்கும் விதமான மாற்றங்களை விளம்பர ஒலிப் பதிவுகளில் பிரதி எழுத்துக்களில் உள் நுழைத்து வெற்றி கண்டவர்.

இன்று எனக்கு கிடைத்திருக்கும் ஒலிபரப்பாளன் அடையாளத்திற்கு காரணமான பிதாமகர் அவர் தான் .

எனக்கு மட்டுமல்ல சூரியன் வானொலி மூலமாக அடையாளங்களை ஏற்படுத்திய பலருக்கும் அவர் தான் மூலம்
பாராம்பரியம் மிக்க இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பு பாரம்பரியத்தில் இருந்து தோன்றிய போதிலும் அதற்கு முற்றிலும் மாறுபட்டதான ஒரு புதிய தமிழ் ஒலிபரப்பு கலாசாரத்தை இலங்கையில் ஆரம்பித்து வைத்தவர் அவர்.

இலங்கையில் தமிழ் வானொலி ஒலிபரப்பில் தனியார் வானொலியின் புரட்சியின் நாயகன் எத்தனையோ விமர்சனங்களை அவர் எதிர் கொண்ட போதிலும் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாமல் அதனை வெற்றிகரமான பாதையில் வழிநடத்திக் காட்டியர்.

சூரியன் வானொலி ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களில் அசைக்க முடியாத அலைவரிசையாக மாற்றம் பெற்றதில் இவரின் ஆற்றல் மிக முக்கியமானது.

அதனால் தான் இன்றும் சூரியனின் கௌரவம் மிக்க ஆலோசகராய் அவர் விளங்குகின்றார்.எல்லா கோடுகளும் ஒரு புள்ளியில் இருந்து தான் ஆரம்பிக்கும். எனது இன்றைய வாழ்வின் தொடக்கப் புள்ளியை வரைந்தவர் அவர் தான்.
நான் தேசிய தகவல் தொழில்நுட்ப கல்லூரியின் கணனித் துறையில் கல்வி கற்றுக் கொண்டிருந்தேன்.

உயர் தரத்தில் கிடைத்த பெறு பேறுகளின் அடிப்படையில் யாழ் பலக்லைக்கழகத்தின் உயிரியல் விஞ்ஞானத்துறைக்கே தெரிவு செய்யப்பட்டிருந்தேன் மீண்டும் ஒரு முறை முயன்று பார்க்கும் ஆவலும் விடுபட்டு மருத்துவக் கனவும் கலைந்து போயிருந்த காலம் அது.

கணனித் தொழில் நுட்பம் சார்ந்த விடயங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கணனி கற்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தான் அவரை சந்திக்கும் வாய்ப்பு முதலில் கிடைத்தது.

எமது குடும்ப நணப்பரும் இலங்கையின் மூத்த ஒலிபரப்பாளர்களில் ஒருவருமான திரு.சந்திரமோகன் அவர்கள் மூலமாக நடா அண்ணாவின் அறிமுகம் கிடைத்தது.

உலக வரத்தக மையத்தின் 35 வது மாடியில் வரவேற்பறையில் அவரும் சர்தார் ஜமீலும் என்னை சந்தித்த அந்திப் பொழுதொன்றில் எனது ஒலிபரப்பு வாழ்வின் பயணம் ஆரம்பிக்கின்றது.சில தாள்களில் எழுதப்பட்ட பாடல் விளக்க விரிகள் செய்திகள் விளம்பர பிரதிகள் என முதல் கட்ட பரிசோதனைகளை நடத்தி முடித்தார். பாடல் ரசனை குறித்தும் அது தொடர்பான அறிவு குறித்தும் துருவித் துருவி கேள்விகள் கேட்டார்.

குரல் பதிவினை வழங்கி விட்டுச் செல்லுமாறும் வேலையில் இணைவதாக இருந்தால் எனது உடல் நிறையை குறைக்க வேண்டும் இல்லாவிட்டால் 35வது மாடியில் அமைந்துள்ள சூரியனில் என்னை பணிக்கு அமர்த்துவது சிரமமாக இருக்கும் என்ற கடியோடு விடை கொடுத்தார்.

அத தான் ஆரம்பம் அதன் பின்னர் ஓரு சில நாட்களில் மீண்டும் அவருடைய செயலாளர் அருந்ததி அக்கா எனது வீட்டிற்கு அழைப்பினை ஏற்படுத்தி அன்று இரவே பயிற்சியில் இணையுமாறு கோரினார்.

வானொலி அறிவிப்பாளன் ஆக வேண்டும் என்பது ஒரு கனவாக இருந்தது உண்மை தான் ஆனால் அதுவே முழு நேரத் தொழிலாக மாற்றம் பெறும் என்று அப்போது நான் நினைத்திருக்கவில்லை.

அன்று தொடங்கிய பயணத்தில் என்னை தனது உற்றசாகமளிக்கும் வார்தைகளாலும் விமர்சனங்களாலும் செதுக்கத் தொடங்கினார் நடா அண்ணா.

ஒலிபரப்பாளனுக்குள் ஒளிந்திருக்கும் வாசிப்பாளன் எவ்வளவு தூரம் ஒலிபரப்பில் ஆளுமை செலுத்துவான் என்பதை அவரில் இருந்து தான் கற்றுக் கொண்டேன்.

குரல் வளத்தை தாண்டி ஒலிபரப்பாளன் என்ற அடையளாத்திற்கு நாம் பயன்படுத்தும் மொழியின் மீது நாம் கொண்டுள்ள ஆழுமை எத்தனை அவசியமானது என்பதை எனக்கு புரியவைத்தவர்.

ஒலிபரப்பின் போதான கவனக் கலைப்பான்களுக்கு அவர் சொல்லும் பாம்புக் கதை மிகவும் பிரசித்தமானது.

ஆனால் அதன் உள் அர்த்தம் எத்தனை துன்பச் சுமைகளை நாங்கள் சுமந்து கொண்டிருந்தாலும் அவற்றை இறக்கி வைத்து விட்டு வெறுமையான மனதுடன் கலையகம் செல்ல வேண்டும் என்பதாகவே இருந்தது.

வானொலி அறிவிப்பாளன் என்ற நிலையில் இருந்து ஒரு ஒலிபரப்பாளன் என்ற நிலை வரை மிகக் குறுகிய காலத்தில் உயரம் காணச் செய்தவர்.

நிகழ்சிகளுக்கான குரல் பயன்பாடு, செய்தி வாசிப்பு விளம்பரங்கள் என பல தளங்களில் செயல்படுகின்ற போது எவ்வாறு எங்கள் குரலையும் வெளிப்படுத்தல் பாங்கினையும் மாற்றியமைக்க வேண்டும் என்ற நுட்பங்களை மிகவும் கவனத்தோடு கற்றுத் தந்தவர்.நான் எல்லோரிடம் கூறிக் கொள்ளும் ஒரு விடயம் தான் நடா அண்ணாவின் அருகாமையும் வழிகாட்டலும் கிடைத்தால் ஆர்வம் கொண்ட எவருமே ஒலிபரப்புத் துறையில் முன்னேற முடியும் என்பது தான் அதற்கு நான் மட்டுமல்ல மேலும் பல நண்பர்களும் சாட்சி.

ஒலிபரப்பு துறையில் ஆற்றல் மிக்க பலரை சந்தித்திருக்கிறேன் ஆனால் அவர்களால் நடா அண்ணா போன்று கற்றுக் கொடுக்க முடிவதில்லை.

தனக்கான ஒரு ஒலிபரப்பு பாணியினை அவர் கொண்டிருந்தாலும் எமக்கே எமக்கான ஒரு பாணியை உருவாக்க வேண்டும் என்பதிலும் அது எங்கள் குரல் வளத்திற்கு ஏற்ற வகையில் எவ்வாறானதாக இருந்தால் எங்களால் சிறப்பாக பிரகாசிக்க முடியும் என்பதிலும் அக்கறை கொண்டவர் நடா அண்ணா.

என்னை மட்டுமல்ல ஆற்றலும் ஆர்வமும் கொண்ட எல்லோருக்கும் அவர் குருவானவர்.

எனது நண்பன் தீபசுதனை சூரியனுக்கு அழைத்து வந்து அறிமுகம் செய்த போது என்னைப் போலவே அவனையும் கவனித்துக் கொண்டவர்.

தீபசுதன் சூரியனில் சிறிது காலமே இயங்கினாலும் அதற்குள் அவன் பெயர் வெளிப்படுவதற்கு நடா அண்ணா தான் முக்கிய காரணமாகின்றார்.

சூரியனில் இணைந்து ஒரு சில வாரங்களில் இரவு நேரச் செய்தியினை வாசிப்பதற்கான வாய்பினை வழங்கினார்.

சூரியனின் இரவுச் செய்திகள் மிக முக்கியமானவையாகவும் பலராலும் விரும்பிக் கேட்கப்படுகின்ற செய்தியாகவும் இருந்த காலம்.

அனுபவமில்லாத ஒருவனாக அப்போது தான் ஒலிபரப்பில் கால் பதித்திருக்கும் ஒருவனான எனக்கு அதனை வழங்கியவர் அதுவே எனக்கு பலமான அத்திவாரத்தை ஏற்படுத்தி தந்தது.

செய்திப் பிரிவினருடனான தொடர்பு பின்னாட்களில்  சூரியப் பார்வைகள் நிகழ்சியினை தொகுத்து வழங்கும் வாய்ப்பினை எனக்க வழங்கியது.

இந்த வாய்ப்பு ஒரு ஒலிபரப்பு ஊடகவியலாளனாக நான் மாறுவதற்கும் அடிப்படையாக அமைந்தது.

அதேபோல் கலைஞர்களை நேர்காணும் நிகழ்சியினை இலங்கையின் புகழ் பூத்தபாடகியான நித்தியா மகிந்த குமார் அவர்களுடன் இணைந்து வழங்கும் வாய்பினையும் நடா அண்ணா எனக்க வழங்கி இருந்தார்.

இது நேர்காணல் கலையை கற்றுக் கொள்ளும் வாய்பினை எனக்கு ஏற்படுத்தி தந்தது.

இலங்கையின் கலைத் துறையின் முக்கியமான பல ஆழுமைகளை இந்த நிகழ்சியின் மூலமாக நேர்காண்பதற்கு வாய்பு கிடைத்தது.

சூரியனில் இருந்து விலகிய பின்னரும் வெளியில் நடைபெறும் விளம்பர ஒலிப்பதிவுகளின் போது அவரை சந்தித்துக் கொள்வதுண்டு.
அப்போதெல்லாம் அதே அக்கறையோடு திருத்தங்களையும் ஆலோசனைகளையும் சொல்லித் தந்திருக்கின்றார்.

எனது குரலில் ஒலிபரப்பாகும் விளம்பரங்கள் சிறப்பாக இருந்தால் உடனடியாகவே பாராட்டும் பெரும் தன்மை கொண்டவர்.

அதேபோல் அதில் தவறுகள் இருந்தாலும் உடனடியாக சுட்டிக்காட்டுவார்.
இலங்கையின் ஒலிபரப்பு உலகின் தவிர்க்க முடியாத அடையாளம் அவர்.
முழுமையான ஒலிபரப்பாளனாய் விளங்கும் அவர் ஒலிபரப்புத்துறைக்கு வெளியில் திரைத் துறையிலும் நாடாகத் துறையிலும் அதீத ஈடுபாடு கொண்டவராகவும் மிளிர்கின்றார்.ஏன் இப்போது இந்த பதிவு என்று சில கேள்விகள் எழக் கூடும் இன்று பொங்கல் வயல்களில் நெல் வளர்த்த சூரியனுக்கும் நெல்லை அரிசியாக்கி எமது பசிக்கு உணவளிக்கும் உழவனுக்கும் நாங்கள் நன்றி சொல்லும் நாள் இது.

அது போல இது எனக்கு வாழ்வளித்த ஒருவருக்கு நான் நன்றி சொல்லும் நாளாகவும் அமையட்டும் என்பதால் தான் இந்த பதிவு.

நடா அண்ணா உங்கள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் என்றென்றும் நெஞ்சார்ந்த நன்றிகள்.

அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் !

Monday, December 31, 2012

தமிழ் மரபுரிமைத் திங்கள் 2013


புதிய தேசத்தில் புதிய வாழ்கைச் சூழலில் இருந்து எழுத்தப்படும் முதலாவது பதிவு இது.

2011ம் ஆண்டு ஓக்ரோபர் மாதம் கனடாவிற்கு புலம் பெயர்ந்த பின்னர் இங்கிருக்கும் வாழ்கை முறைக்குள் வாழப் பழகுவதற்கான போராட்டங்களோடு ஒரு வருடம் கடந்தோடிப் போய்விட்டுள்ளது.

இங்கும் எழுதுவதற்கும் பகிர்வதற்கும் நிறையவே விடயங்கள் இருக்கின்றன.
ஆனால் அதற்கானநேரத்தை தேடி அடைவதென்பது சிரமமளிக்கும் ஒன்றாகவே இருந்த வருகின்றது.இந்த வருடம் சமூக வலைத்தளங்களில் அதிகம் இயங்குவதற்கு தீர்மானித்திருக்கிறேன்.அது சாத்தியமாகின்றதா இல்லையா என்பதை காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

இந்த பதிவின் நோக்கம் தமிழர்களின் தலைமாதம் குறித்த ஒரு சிறப்பானதும் முக்கியத்துவம் மிக்கதுமான வேலைத் திட்டம் தொடர்பான சில விடயங்களை பகிர்வதாகவே இருக்கின்றது.

நான் கடமையாற்றி வரும் வணக்கம் எப்.எம் மற்றும் தமிழ் வண் தொலைக்காட்சி ஆகியவற்றின் ஊடக பங்களிப்போடு இம்முறை ரொரன்ரோவில் தமிழர்களின் பாரம்பரிய மாதம் தொடர்பான வேலைத் திட்டங்கள் "தமிழ் மரபுரிமைத் திங்கள்" என்ற தொனிப் பொருளுடன் முன்னெடுக்கப்படுகின்றன.

தமிழ் மீதும் தமிழரின் பாரம்பரியங்கள் மீதும் பற்றுதி கொண்ட இளம் தலைமுறையினரின் கடின உழைப்பினால் இங்கு தமிழர்கள் வாழும் முக்கிய நகரங்களின் நகர சபைகள் தை மாதத்தை தமிழர்களின் பாரம்பரிய மாதமாக அங்கீகரித்துள்ளன.

ஒன்ராறியோ மாகாண சபையும் அதனை அங்கீகரிப்பதற்கு தயாராக இருந்த போதிலும் மாகாண சபை அமர்வுகள் கடந்த பல வாரங்களாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளமையால் அதற்கான சாத்தியம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

2013ம் அண்டில் ஒன்ராறியோ மாகாண சபையின் அங்கீகாரம் தமிழர்களின் பாரம்பரிய மாதத்திற்கு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புலம் பெயர் தேசங்களில் வாழும் மக்கள் இழந்து விட்ட தமது தாய் மண்ணின் வேர்களை தேடிக்கொண்டிருக்கின்ற சூழலில் முன்னெடுக்கப்படும் இது போன்ற முனைப்புகள் வரவேற்பிற்குரியவை.

நேரத்தோடு போராடும் வாழ்கைச் சூழலின் மத்தியிலும் எழுந்து நிற்கும் இது போன்ற முயற்சிகளை நாங்கள் கொண்டாட வேண்டும் என்பது அவசியமாகின்றது.


நீதன் ஷான் இங்குள்ள இளம் தலை முறையின் முக்கிய அடையானமாக இருக்கும் ஒரு தமிழ் இளைஞன்.

இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் என்பதை தாண்டி இதனை வெற்றிகரமாக முன் நகர்த்துவதற்கு கடந்த பல வருடங்களாக உழைத்து வரும் இளைஞர்களின் குறியீ்டாக கருதப்படுபர். அவரின் இந்த முயற்சி பல இளைஞர்களை தமிழரின் பாரம்பரியங்கள் குறித்தும் தமிழ் மொழி குறித்தும் அறிந்து கொள்ளும் திசை நோக்கி திருப்பியுள்ளது.

தமிழர்களாக நாங்கள் பெருமையோடு போற்றும் தமிழரின் பாரம்பரியங்களை இங்கு வாழும் வேற்றின சமூகங்களோடு பகிர்ந்து கொள்வதும் இங்கு புதிதாக தோன்றியுள்ள எமது அடுத்த தலைமுறைக்கு அதனை கொண்டு சேர்ப்பதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

பல்லின சமூகங்களோடு இணைந்து பணியாற்றும் நம்மவர்கள் அவர்களின் வேலைத் தளங்களிலும் மாணவர்கள் அவர்களின் கல்வி நிலையங்களிலும் இதனை முன்னெடுக்க முடியும்.

ஒரு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களின் நிகழ்சி நிரலுக்கு அமைவாக தமிழர்களின் பாரம்பரிய மாத நிகழ்வுகள் நடத்தப்படாமல் பரந்து பட்ட பங்களிப்புடன் இதனை முன்னெடுப்பதற்கான ஏற்பாடு வரவேற்பிற்குரியது.

இங்கு இருக்கும் அமைப்பியல் முரண்பாடுகள் காரணமாக ஒரு அமைப்பினால் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்வு மற்றைய அமைப்புகளால் புறக்கணிக்கப்படுதல் அல்லது அதற்கு மாற்றான நிகழ்வு அதே தினத்தில் ஏற்பாடு செய்யப்படுதல் என்ற கொடிய நோய் புலம் பெயரந்த் எங்களை பீடித்திருப்பதும் இந்த ஏற்பாட்டிற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

எல்லோரும் வாருங்கள் ஒன்றாக வடம் பிடிப்போம் தேர் நகரட்டும் என்ற இந்த அழைப்பு ஒரு சிறந்த முன்னுதாரணமாக கொள்ளப்படக் கூடியது.
தமிழர்களின் பாரம்பரிய மாதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் குறித்தும் அதற்கு தேiவாயன தொழில் நுட்ப ஆலோசனைகளையும் ஏற்பாட்டுக் குழுவினர் வழங்கவுள்ளனர்.
அவர்களின் ஒத்துழைப்புடன் தமிழர்களின் வாழ்வியல் மீது அக்கறை கொண்டவர்கள் தங்கள் பகுதிகளில் இதனை முன்னெடுக்க முடியும்.

பணியிடங்களில் தமிழ் பணியாளர்கள் தமது மாற்றின பணியாளர்களோடும், மாணவர்கள் வேற்றின சமூக மாணவர்களோடும் தொடர் மாடி மனைகளில் வாழும் மக்கள் அங்கு வாழும் மாற்றின சமூக மக்களோடும் ஒன்று கூடல்களை, அல்லது ஒரு தேநீர் விருந்தினை ஏற்பாடு செய்வதன் ஊடாகவும் இந்த மாதத்தை அவர்களுக்கு அறிமுகம் செய்யலாம்.

இந்த நிகழ்வுகளில் பேசுவதற்கு சிறப்பு பேச்சாளர்களை ஏற்பாடு செய்வதற்கும் தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தயாராக இருக்கின்றார்கள்.

இந்த சிறிய நிகழ்வுகளில் தமிழர்களின் வாழ்வியல் குறித்த விடயங்களை மற்றவர்களுடன் பரிமாறிக் கொள்ள முடியும். அந்த சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு தமிழரின் பாரம்பரியங்களையும் அவர்களின் வரலாற்று தடங்களை தெளிவுபடுத்துவதற்கான சிறு ஆவணங்கள் தாயரிக்கப்பட்டுள்ளன.

தமிழர்களை புரிந்து கொள்வதற்கு ஏதுவானதாகவும் குறுகிய வாசிப்பின் ஊடாக நீண்டகால வரலாற்றை அறிந்து கொள்வதற்கு உதவியாக அமையும் கைநூல்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.

தமிழர்களின் பாரம்பரிய மாத நிகழ்வுகளின் ஏற்பாட்டுக் குழுவினை தொடர்பு கொள்வதன் மூலம் இந்த விடயங்களை பெற்றுக் கொள் முடியும்.
இதேவேளை சிறு துளி பெரு வெள்ளம் என்பது போல் சிறுகச் சிறுக நாங்கள் முன்னெடுக்கும் இந்த வேலைத் திட்டங்கள் எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் வல்லமை மிக்கது என்ற நம்பிக்கை எங்களுக்குள் ஏற்பட வேண்டும்.

இங்கு தமிழர்களில் சிலர் கடந்த காலங்களில் செயல்பட்ட விதமானது தமிழர்கள் குறித்த தவறான புரிதலை மாற்றின மக்களிடையில் ஏற்படுத்தி விட்டுள்ளது.

தமிழ் இளைஞர் குழுக்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மேற்கொண்ட குழு வன்முறைகள் தமிழர்களை குழு வன்முறையாளர்களாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

அதே போல் கடனட்டை மோசடிகள் காப்புறுதி மோசடிகள் குறித்து சில தமிழர்கள் கைது செய்யப்பட்டமை தமிழர்களை மோசடிக்காரர்கள் என்று அடையாளப்படுத்தவும் காரணமாக அமைந்துள்ளது.

ஆனால் மிக அண்மைக் காலமாக மாற்றின மக்களுக்கு தமிழர்கள் யார் என்ற புரிதனை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றன.
பொதுவாக இங்குள்ள பொது வைத்திய சாலைகள் மக்களின் பங்களிப்புடன் தமது உட்கட்டுமான வசதிகளை அதிகரித்து வருகின்றன.

மருத்துவ சேவைகளை அரசாங்கம் மக்களுக்கு இலவசமான வழங்கி வருகின்ற போதிலும் வைத்தியசாலையின் வசதிகளை மேமப்படுத்துவதற்கு பிரதேச மக்கள் ஒத்துழைப்பு வேண்டப்படுகின்றது. இப்போது தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகளுக்கான நிதி சேகரிப்புகளை தமிழ் சமுகம் பல்வேறு வழிமுறைகளின் ஊடாக முன்னெடுத்து வருகின்றது.

இதன் மூலம் தமிழர்கள் மீதான நன்மதிப்பு இங்கு ஏற்றம் பெற்று வருவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது.

தமிழர்கள் தங்களுக்காக மட்டுமல்லாமல் இங்கு வாழும் ஏனைய இனங்களுக்காகவும் உதவிகளை வழங்குகின்றார்கள் என்ற எண்ணம் மாற்றின மக்களிடையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தமிழ் மரபுத் திங்கள் என்ற செயல் திட்டமானது தமிழர்களின் மதிப்பீடுகளை ஏனைய சமூகங்களிடையில் அதிகரிக்கும் என்று நம்பமுடியும்.

எதிர் வரும் காலங்களின் புலம் பெயரந்து தமிழர்கள் வாழும் தேசங்கள் எங்கும் மரபுரிமைத் திங்கள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்பதே இந்த வருடத்தின் முக்கிய குறிக்கோளாக கொள்ளப்படுகின்றது.

இன்னும் நிறைய விடயங்கள் இத குறித்து பகிர்ந்து கொள்ளப்பட வேண்டியுள்ளதால் மீண்டும் சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய புதுவருட வாழத்துக்கள்....!